நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நாடு தழுவிய ஊரடங்கினை மார்ச் மாதம் 24ஆம் தேதி நள்ளிரவு முதல் அமல்படுத்தியது. அதுமட்டுமின்றி, மாநிலங்களுக்கிடையேயான பொதுப்போக்குவரத்து, பொது மக்கள் ஒன்று கூடுதல் உள்ளிட்டவற்றிற்கும் தடை விதித்தது.
இதையடுத்து வழிபாட்டுத் தலங்கள், திருமண மண்டபங்கள் என மக்கள் கூடும் இடங்கள் அனைத்தும் மூடப்பட்டன. ( தற்போது ஒரு சில தளர்வு வழங்கப்பட்டுள்ளது)
ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து இருபதுக்கும் குறைவான நபர்களைக் கொண்டு திருமணங்களை நடத்த மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தின. இதனால், ஏராளமான திருமணங்கள் எவ்வித ஆடம்பரமும் இன்றி எளிமையாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மாட்டுபட்டியைச் சேர்ந்த பிரியங்கா என்ற பெண்ணிற்கும், தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டம், சரவணம்பட்டியைச் சேர்ந்த ராபின்சன் என்பவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடக்கவிருந்தது.
கரோனா வைரஸின் பரவலால், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதால், ஊரடங்கு நிறைவடைந்தபின் இவர்களது திருமணத்தை நடத்த இரு வீட்டாரும் முடிவு செய்தனர். ஆனால், ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டுக்கொண்டே செல்வதால், இரு வீட்டாரும் திருமணத்தை உடனடியாக நடத்த எண்ணினர்.
ஆனால், மணமகன் குடும்பத்தினர் திருமணத்திற்காக தமிழ்நாட்டிலிருந்து கேரள மாநிலத்துக்குச் செல்ல ஈ-பாஸிற்கு விண்ணப்பித்ததில் மணமகனைத் தவிர, மற்றவர்களது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
இதையடுத்து, இரு குடும்பத்தினரும் தமிழ்நாடு - கேரள எல்லைப்பகுதியில், உள்ள சாலையில் திருமணத்தை நடத்தினர்.
இதில் மணமக்கள் குடும்பத்தினர் தவிர, கேரள சுகாதாரத் துறையினர் சிலரும் கலந்து கொண்டனர். இதையடுத்து, மணப்பெண் பிரியங்கா திருமணம் முடிந்து, சரவணம்பட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
தமிழ்நாடு - கேரள எல்லையில், சாலையில் அமர்ந்து தமிழ்நாடு மணமகனும், கேரளப் பெண்ணும் திருமணம் செய்துகொண்ட சம்பவம், இருமாநிலங்களுக்கு இடையிலான நட்புறவை நீட்டிக்கும் செயல் என சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்தனர்.