பாஜகவிலிருந்து விலகிய அக்கட்சியின் மூத்தத் தலைவர் ஏக்நாத் காட்சே நேற்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.
நேற்று மும்பையில் நடைபெற்ற நிகழ்வில் ஆயிரக்கணக்கான தனது ஆதரவாளர்களுடன் என்.சி.பி.யில் இணைந்த அவருக்குப் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மகாராஷ்டிராவில் பலர் பாஜகவை விட்டு வெளியேற விரும்புகிறார்கள். அவர்களைத் கட்சி தடுத்து வருகிறது. மாநிலத்தை ஆளும் மகா விகாஸ் அகாடி கூட்டணியை வீழ்த்திவிடலாம் என பாஜக தவறான கணக்கைப் போடுகிறது.
அதற்கு வாய்ப்பில்லை. இந்த அரசு ஒருபோதும் வீழ்ச்சியடையப் போவதில்லை. கடந்த 42 ஆண்டுகளாக பாஜகவில் அங்கம் வகித்துவந்து அக்கட்சியின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட என்னைப் போன்றவர்களது கோரிக்கைகளை அவர்கள் கேட்க மறுக்கின்றனர்.
நாங்கள் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேரும்போது, இரண்டு வாக்குறுதிகளை வழங்கினோம். நாங்கள் கட்சியின் அமைப்பை பலப்படுத்துவோம் என்றும், மகா விகாஸ் அகாடி அரசுடன் இணைந்து மாநிலத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபடுவோம் என்றும் இரு வாக்குறுதிகளை வழங்கியுள்ளோம். அதற்காக நாங்கள் கடுமையாக உழைப்போம்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் வடக்கு மற்றும் மேற்கு விதர்பா பகுதிகளை மேம்படுத்துவதே எங்கள் முக்கிய இலக்காக வைத்திருக்கிறோம். அரசுடன் இணைந்து எங்கள் பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வோம்" என்றார்.
வடக்கு மகாராஷ்டிரா, மேற்கு விதர்பாவில் உள்ள 15-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மகத்தான செல்வாக்கை கொண்டிருக்கும் ஏக்நாத் காட்சேவின் விலகல் பாஜகவுக்கும் பலத்த பின்னடைவையும், என்.சி.பிக்கு பெரும் பலத்தையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இருந்து பாஜக மேலிடம் மீது கடும் அதிருப்தியில் உள்ள அக்கட்சியின் மூத்தத் தலைவர்களான, பிரகாஷ் மேத்தா, சத்ரசேகர் பவன்குலே, வினோத் தவ்தே போன்றவர்களும் காட்சேவின் வழியைப் பின்பற்றி என்.சி.பி.யில் இணையலாம் என தேசியவாத காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.