கரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு நடுவே, விடுமுறை ஏதுமில்லாமல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டுத் தொடர் தொடங்கி நடைபெற்றுவருகிறது.
முன்னதாக, கூட்டுத் தொடர் தொடங்குவதற்கு முன்பு உறுப்பினர்களுக்கு எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனையில் பாஜகவை சேர்ந்த மீனாட்சி லேகி, அனந்த் குமார் ஹெக்டே மற்றும் பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா உள்ளிட்ட 17 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், உடல் நலனைக் கருத்தில்கொண்டு நடப்பு மழைக்காலக் கூட்டுத் தொடரில் கலந்து கொள்வதிலிருந்து விடுப்பு அளிக்குமாறு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் மாநிலங்களவைத் தலைவரிடம் அனுமதி கோரியுள்ளனர்.
மேலும், ஆஸ்கார் பெர்னாண்டஸ், நவனீத கிருஷ்ணன், நரேந்திர ஜாதவ் மற்றும் சுஷில் குப்தா ஆகியோரும் விடுப்பு கோரியுள்ளனர். முன்னதாக, பாஜகவின் பெலகாவி எம்.பி.யும், ரயில்வே இணை அமைச்சருமான சுரேஷ் அங்காடி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் மழைக்காலத் தொடரில் கலந்துகொள்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து பனாஜி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் கடந்த சனிக்கிழமை (செப் 12) குணமடைந்து வீடு திரும்பினார்.
இருப்பினும், 67 வயதான அவர் நாடாளுமன்ற கூட்டுத் தொடரில் பங்கேற்க குறைந்த அளவு சாத்தியக்கூறுகளே உள்ளன எனத் தெரிவிக்கின்றனர். இதற்கிடையில், திரிணாமுல் காங்கிரஸின் தலைமைக் கொறடா உள்ளிட்ட ஏழு மாநிலங்களவை உறுப்பினர்கள் பருவமழை அமர்வில் கலந்து கொள்வதைத் தவிர்க்க முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக பேசிய ராய், " நான் முக்கியமாக இரண்டு காரணங்களால் இந்த அமர்வில் கலந்து கொள்ள மாட்டேன் என்று மாநிலங்களவைத் தலைவருக்கு கடிதம் எழுதினேன். 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி உள்துறை செயலர் உத்தரவு பிறப்பித்துள்ளார். சட்டம் இயற்றுபவர்கள் என்ற வகையில், நாங்கள் சட்டத்தை மீறுபவர்களாக இருக்க முடியாது" எனக் கூறினார்.