உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த தர்மேந்திர பிரதாப் சிங் 8. 1 அடி உயரம் கொண்டவர். அதிக உயரம் கொண்டதால் இந்தியாவின் உயரமான நபர் என பலராலும் அறியப்பட்டு வருகிறார்.
இவருக்கு சில நாட்களுக்கு முன்பாக விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தால் இடுப்புப் பகுதி மிகவும் பாதிப்படைந்தது. இதனால் சில காலம் சிகிச்சை பெற்ற தர்மேந்திர பிரதாப், லக்னோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் இடுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஆனால் உயரமான மனிதராக இருக்கும் தர்மேந்திர பிரதாப் சிங் வசதி இல்லாத காரணத்தால், அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாமல் தவித்துவந்தார். இவரது நிலையை அறிந்த அகமாதபாத்தை சேர்ந்த கே.டி மருத்துவமனை தர்மேந்திராவுக்கு உதவ முன் வந்தது.
அதையடுத்து கே.டி மருத்துவமனையில் இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து மருத்துவர்களிடம் பேசுகையில், ’’இவருடைய இடுப்பின் அளவை நிர்வகிப்பதே மிகப்பெரும் சவாலாக இருந்தது. இவருக்காக சென்னையிலிருந்து பெரிய அளவிலான அசிடாபுலர் கப்கள் (acetabular cups) கொண்டுவரபட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது’’ என்றனர்.