ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் குரங்குகள் தொல்லை அதிகரித்து வருகிறது. குரங்குகள் பயிர்களை சேதப்படுத்தி வருவதால், தங்களுக்குப் பெருத்த நஷ்டம் ஏற்பட்டு வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். குரங்குகளின் அட்டகாசம் தாங்கமுடியாமல் விவசாயிகள் பலர், குரங்குகளின் தொல்லையைத் தடுக்க புதிய முறைகளை முயற்சித்து வருகின்றனர். அப்படி கிரி என்ற விவசாயி செய்த முயற்சி நல்ல பலனளித்துள்ளது.
கிருஷ்ணா மாவட்டத்தின் நுஜிவிடு நகரில் உள்ள எம்.டி.ஓ அலுவலகத்திற்கு அருகில் வசித்து வருகிறார், விவசாயி கிரி. இவர் குரங்குகளை விரட்ட 'வாசனை திரவிய துப்பாக்கி' ஒன்றைத் தயாரித்து அசத்தியுள்ளார்.
இரண்டு குழாய்கள், ஒரு கேஸ்-லைட்டர், ஒரு பிளாஸ்டிக் பை, ஆல்கஹால் கலந்த வாசனை திரவியம் கொண்டு இந்த துப்பாக்கி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முறை நல்ல பலனளித்துள்ளது. இதன் மூலம் குரங்குகளை விரட்டுவது எளிது என அவர் கூறுகிறார்.
இந்த 'வாசனை திரவிய துப்பாக்கி எவ்வாறு செயல்படுகிறது என்றால், இரண்டு குழாய்களில் ஒரு குழாய் மூன்று அங்குல ஆரமும், மற்றொன்று இரண்டு அங்குல ஆரமும் உள்ள குழாய்கள் இரண்டையும் இணைத்து, அதன் பின் புறத்தில் மூடியை இறுக்கி, மேலே கேஸ்-லைட்டரை அழுத்தி பற்ற வைக்கவேண்டும். அப்போது, முன்பக்கத்தில் இருக்கும் ஆல்கஹால் கலந்த வாசனை திரவியத்தை குழாயில் ஊற்றி பிளாஸ்டிக் பையை வாயில் இறுக்கிக் அடைக்க வேண்டும். அப்போது அழுத்தம் அதிகரித்து பிளாஸ்டிக் பை வெடிகுண்டு போன்ற சத்தத்தை ஏற்படுத்தும்.
இந்த சத்தத்தால் குரங்குகள் விவசாய நிலத்துக்குள் வருவதற்கு அஞ்சுகின்றன என்றும், இந்த முறை நல்ல பலனளிக்கிறது என்றும் விவசாயி கிரி தெரிவித்துள்ளார்.