ரோஸ் வேலி மற்றும் சாரதா நிதி நிறுவனங்கள் மீதான மோசடி வழக்கில் சிறப்பு விசாரணைக்குழு அதிகாரியாக செயல்பட்டவர் ராஜீவ் குமார். வழக்கு விசாரணையில் முக்கியமான ஆவணங்கள் மாயமானதை அடுத்து விசாரணைக்கு உதவுமாறு சிபிஐ தரப்பில் கோரப்பட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக கடந்த இரண்டு வருடங்களாக சம்மன் விடுத்தும் அவர் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது.
அதே நேரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கே.டி.சிங் தொடர்புடைய நிறுவனத்தின் ரூ.239 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கியது. இந்நிலையில், முறைகேட்டில் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் கொல்கத்தா காவல்துறை ஆணையர் ராஜீவ் குமாரை கைது செய்ய சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி,“மேற்கு வங்காளத்திற்கு பா.ஜனதா தொல்லை கொடுக்கிறது. அவர்கள் வலுக்கட்டாயமாக மேற்கு வங்காளத்தை அழிக்க விரும்புகிறார்கள். அவர்களுடைய பேரணிக்கு தடை விதிக்கப்பட்டதால் இந்நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். அமித்ஷாவும், பிரதமர் மோடியும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
பாதுகாப்பு படைகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது என்னுடைய பொறுப்பாகும். நீங்கள் நோட்டீஸ் கொடுக்காமல் கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வீட்டிற்கு வந்துள்ளீர்கள். எங்களால் சிபிஐ அதிகாரிகளையும் கைது செய்ய முடியும், ஆனால் நாங்கள் செய்யவில்லை. இன்று மிகவும் வேதனையை உணர்கிறேன். இது கூட்டாட்சி முறையை அழிக்கும் செயலாகும்” என்று குற்றஞ்சாட்டினார்.
மேலும் தற்போது ராஜீவ் குமார் வீட்டில் மமதா பானர்ஜி முகாமிட்டு இருப்பது, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.