வருகிற மே மாதம், மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பாஜகவுக்கும், மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவிவருகிறது.
இந்தத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க பாஜக பெரும் முனைப்பு காட்டி வருகிறது. இதனால் பாஜக தேசியத் தலைவர்கள் தங்கள் தேர்தல் பரப்புரையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மேற்கு வங்கம் வந்த உள்துறை அமைச்சர் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு பாடகர் வீட்டில் உணவு உண்டார்.
இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம், பிர்காம் மாவட்டத்தில் உள்ள போல்பூரில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்க்கொண்ட அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, நேற்று (டிச.30) கொல்கத்தா திரும்பியபோது, திடீரென அங்குள்ள பழங்குடியின கிராமத்திற்குச் சென்று அங்குள்ள தேநீர் விடுதி ஒன்றில் தேநீர் அருந்தினார். மேலும், அந்தப் பகுதியைச் சேர்ந்த பழங்குடியினப் பெண்ணுடனும் அவர் சமையலில் இறங்கினார். இந்தக் காணொலி தற்போது வைரலாகி வருகிறது.
இது குறித்து மேற்கு வங்க பாஜக தலைவர் கைலாஷ் விஜயவர்கியா கூறுகையில், “பாஜக தலைவர்கள் பழங்குடியின மக்களை சந்தித்ததையடுத்து, மம்தா தற்போது அம்மக்களை சந்தித்துள்ளார். இவை அனைத்தும் நாடகம்” எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க...இரண்டாவது நாளாக மேற்கு வங்கத்தில் பரப்புரை மேற்கொள்ளும் அமித் ஷா!