உத்தரப் பிரதேசம் மாநிலம் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த 18 வயது பெண் ஒருவர்,2018ஆம் ஆண்டு வேலை கேட்டு சென்றபோது பங்கார்மாவ் பேரவைத் தொகுதி பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கரும் அவரது உதவியாளர்களும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் தெரிவித்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த வழக்கு தொடர்பாக காவல் துறையினர் சரியான நடவடிக்கை எடுக்காததால் அப்பெண் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் வீட்டின் முன்பு தீ குளிக்க முயன்றபோது காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனிடையே, அப்பெண்ணின் தந்தை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்தார். அதன்பின்னர் எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் கைது செய்யப்பட்டார். அப்பாவின் மரணத்திற்கு பிறகு அப்பெண் அம்மா மற்றும் அத்தையின் பாதுகாப்பில் வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில், அந்தப் பெண் தனது தாய், வழக்கறிஞர் மற்றும் உறவினருடன் காரில் ரேபேரலிக்கு சென்றபோது அவரது காரின் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது.
இந்த பயங்கர விபத்தில் அந்தப் பெண்ணின் தாய் மற்றும் உறவினர் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அப்பெண்ணும், வழக்கறிஞரும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்த வழக்கில் தொடர்ந்து இறப்புகள் நடந்தவருவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி 'உத்தரப் பிரதேசத்தில் என்ன நடக்கிறது? உன்னாவ் பகுதியைச் சேர்ந்த பெண் விபத்துக்குள்ளானதை சிபிஐ விசாரிக்க வேண்டும். இந்த விபத்து திட்டமிட்டு நடப்பதுபோல் இருக்கிறது' என கூறியுள்ளார்.