மகாராஷ்டிராவில் நடந்த மாலேகன் குண்டுவெடிப்பு வழக்கில் பிரக்யா சிங் தாக்கூருக்கு தொடர்பிருப்பதாகக் கூறி, அவர் 2008ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதுகுறித்து விசாரணை நடத்திய தேசிய புலனாய்வு முகமை, போதிய ஆதாரங்கள் பிரக்யா மீது இல்லாததால், வழக்கை கைவிடுவதாக தெரிவித்தது. முதலில் இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிமன்றம், 2017ஆம் ஆண்டு இவருக்கு ஜாமின் வழங்கியது.
ஜாமினில் வெளிவந்த பின் கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட இவர், பலம் வாய்ந்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்கை வீழ்த்தி எம்.பி.யானார். அவ்வப்போது எதையாவது சர்ச்சையாகப் பேசும் இவர், காந்தியை கொன்ற கோட்சே தேசபக்தியாளர் என்று கூறி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். மேலும் ‘கழிவறையை சுத்தம் செய்யவா எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டேன்’ என்றும் இவர் பேசினார்.
இந்நிலையில், சர்ச்சை நாயகியான இவர் தற்போது மத்திய பாதுகாப்பு நிலைக்குழுவின் உறுப்பினராகவும் சேர்க்கப்பட்டுள்ளார். பாதுகாப்புத் துறை அமைச்சரான ராஜ்நாத் சிங்கின் தலைமையில் உள்ள இக்குழுவில், பிரக்யாவுடன் எதிர்கட்சித் தலைவர்கள் பரூக் அப்துல்லா, சவுகதா ராய், ஆ. ராசா, சரத் பவார் உள்ளிட்ட 21 பேர் உள்ளனர்.
இதையும் படிங்க: ’ஒரே நாடு ஒரே மொழி’ அமல்படுத்தும் திட்டம் இல்லை: அமித் ஷாவை எதிர்க்கும் மத்திய இணை அமைச்சர்?