2019 ஆம் ஆண்டு விடைபெறபோகும் இந்தத் தருணத்தில், இந்தாண்டில் நடந்தேறிய பல நன்மை தீமைகளை அனைவரும் அசைபோட்டு பார்ப்பது வழக்கமான ஒன்று. பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில், இந்த 2019இல் மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றுள்ள நல்ல விஷயங்களையும், சரித்திரத்தில் மாறாத வடுக்களாக அமைந்துவிட்ட தவறான சில முடிவுகள் பற்றியும் மீண்டும் ஒரு முறை எண்ணிப்பார்க்க வைத்து விட்டு இந்தாண்டு கடந்து செல்லவிருக்கிறது.
2019இல், இதுவரை சாத்தியமே கிடையாது என்று கூறப்பட்டு வந்த பல்வேறு சட்ட ரீதியிலான, அரசியலமைப்பு ரீதியிலான மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டன. அதில் சில சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவை என்றாலும் அது மறுப்பதற்கில்லை. முந்தைய காங்கிரஸ் அரசால் ஜனநாயகத்திற்கு எதிரானது என பல காலமாக தட்டிக் கழிக்கப்பட்டு வந்த அரசியல் ரீதியான, மத ரீதியான, கலாச்சார ரீதியிலான பல மாற்றங்களை பாஜக அரசு செய்துள்ளது.
பாஜக அரசு எடுத்த பல சர்ச்சைக்குரிய அதிரடி முடிவுகள் முதலில் எதிர்ப்புகளை சந்தித்தாலும், பின்னர் அக்கட்சிக்கு சாதகமாகி அடங்கிவிட்டன. இதில், குடியுரிமை திருத்தச் சட்டம் மட்டும் விதிவிலக்கு. முத்தலாக் தடை சட்டம் கொண்டுவரப்பட்டபோது, இஸ்லாமிய சமுதாயத்தினரிடையே சொற்ப அளவில் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தாலும், அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிடவில்லை. மதம் சார்ந்த விவகாரங்களில் கை வைப்பதோ, பேசுவதோ கூட ஆபத்தாகி விடும் என முந்தைய அரசுகள் அச்சப்பட்டன. மத விவகாரங்களில் தலையிட்டால் தெய்வகுற்றமாகி விடுமோ எனப் பயந்து சில சிக்கலான விஷயங்களில் கூட முந்தைய அரசுகள் அமைதி காத்தன.
ஆனால் பாஜக அரசோ, எதையும் சட்டை செய்யாமல் முத்தலாக் சட்டம் தொடர்பாக துணிச்சலான முடிவை எடுத்தது. இந்தச் சட்டம் பெண்களுக்கு எதிரானது, மக்களுக்கு விரோதமானது எனக் கூறியே பாஜக அரசு நாடாளுமன்ற இரு அவைகளிலும் மசோதாவை நிறைவேறச்செய்து சட்டமாக்கியது. இதுபோன்ற சர்ச்சைக்குரிய சட்டங்களுக்கு எதிராக எதிர்கட்சிகள் குரல் கொடுத்தாலும், நாட்டின் ஒற்றுமைக்காகவும் தேசத்தின் பாதுகாப்புக்காகவும் இந்தச் சட்டங்கள் என்று கூறி எதிர்கட்சிகளின் விமர்சனங்களை எடுபடாமல் செய்துவிட்டது பாஜக அரசு.
இதுபோன்று காஷ்மீருக்கான சிறப்புத் தகுதி வழங்கும் 370ஆவது சட்டப் பிரிவை ரத்து செய்ததும் துணிச்சலான முடிவுதான். வேறு அரசுகள் கை வைக்கத் தயங்கிய இந்தப் பிரச்னையில், பாஜக அரசு துணிந்து எடுத்த முடிவு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த முடிவாகும். 370ஆவது பிரிவை ரத்து செய்யும் முடிவு எடுப்பதற்கு முன், எதிர்ப்புகள் எழுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கையாக எடுத்த கெடுபிடி நடவடிக்கைகள் அதிரடியானவை தான்.
இதனால், மத்திய அரசு எதிர்பார்த்ததில் 5 விழுக்காடு அளவுக்குக் கூட காஷ்மீர் தெருக்களில் போராட்டங்கள் எழாமல் ஒடுக்கப்பட்டன. முன்கூட்டியே திட்டமிட்டு பல்வேறு தடைகளும் கெடுபிடிகளும் விதிக்கப்பட்டதால் அம்மாநிலத்தில் மக்கள் வெளியில் நடமாடுவதே இயலாமல்போய்விட்டதே இதற்குக் காரணம். தொலைபேசி, இணையதள சேவைகள் முடக்கப்பட்டு ஒட்டுமொத்த காஷ்மீர் மக்களும் வெளியுலகத் தொடர்பின்றி வீடுகளுக்குள் முடக்கப்பட்டனர்.
மக்களைத் திரட்டி போராட்டத்தை தூண்டி விடுவார்கள் என்ற அச்சத்தில் அம்மாநிலத்தில் உள்ள ஒட்டுமொத்த எதிர்கட்சித் தலைவர்களும், பிரிவினைவாத இயக்கத் தலைவர்களும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். இப்படி காஷ்மீருக்கான 370ஆவது சிறப்புப் பிரிவை ரத்து செய்ததுடன், அம்மாநிலத்தையும் இரு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்து, மத்திய அரசு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை ஒட்டுமொத்த அரசியல் தளத்தில் அதிர்வை ஏற்படுத்தியது.
இன்றும் காஷ்மீரில் இணையதள சேவை முடக்கம் நீடித்துவருகிறது. இதனால், உலகிலேயே அதிக நாட்கள் இணையதள சேவை முடக்கப்பட்ட பகுதியாக காஷ்மீர் அமைந்துவிட்டது. மத்திய அரசின் இந்தக் கெடுபிடிகளை சர்வதேச ஊடகங்கள் கடுமையாக விமர்சித்த போதிலும், அதன் தாக்கம் பெரிதாக வெளிப்படாமல் பொசுங்கி விட்டது என்றே கூறலாம். பாகிஸ்தான் மட்டுமே இந்த விவகாரத்தை சர்வதேச பிரச்னையாக்கப் பார்த்தது. ஆனால் சீனா, துருக்கி, மலேசியா தவிர்த்து வேறு எந்த நாடுகளும் பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கவில்லை. எனவே, மத்திய அரசுக்கு இப்பிரச்னையை எதிர்கொள்வது எளிதாகிவிட்டது.
இதேபோல், அயோத்தி விவகாரத்தில் இந்து - இஸ்லாமியர்கள் இடையே நூறாண்டுகள் கடந்து நீடித்த சர்ச்சை ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. இதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், இஸ்லாமிய சமுதாயத்தின் முக்கியப் பிரதிநிதிகளிடமே மனதளவில் மாற்றம் ஏற்படச் செய்தது. ராமர் கோயில் கட்டுவதற்காக, நல்லெண்ண அடிப்படையில் தங்கள் நிலத்தை ஒப்படைக்கத் தயார் என்று தீர்ப்பு வருவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் இஸ்லாமியர்கள் வெளிப்படையாகவே கூறியதையும் காண முடிந்தது. ராமர் கோயில் விவகாரத்தில் தீர்ப்பு வெளியாகி, அரசியல் ரீதியில் பெரும் எதிர்ப்பு எழாததால், இனி எதற்கும் எதிர்ப்பு வராது என நினைத்த மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் மேலும் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது.
அதன்படி, அரசியலமைப்பு சட்டத்திலேயே திருத்தங்கள் கொண்டுவர முடிவுசெய்து, குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. இஸ்லாமியர்களுக்கு எதிரானதான கூறப்படும் இந்தச் சட்டத் திருத்தத்திற்கு நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திவிட்டது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து 2014ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்னர் இந்தியாவில் குடியேறிய இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு மட்டும் இந்திய குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொண்டு வரப்பட்டது.
ஆனால் இந்தச் சட்டத்திற்கு இவ்வளவு எதிர்ப்பும், கொந்தளிப்பும், ரத்தக்களறியும் எழும் என பாஜக அரசு எதிர்பார்க்கவில்லை. உத்தரப் பிரதேசத்தில் ஏற்பட்ட கலவரத்தில் மட்டும் 20 பேர் உயிரிழக்க, நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.
இந்தச் சட்டம் நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேறியவுடன், தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறிய கருத்து, இந்தியாவின் மதசார்பின்மை கொள்கையை தகர்த்து விட்டது எனலாம். உலகம் முழுவதும் மத ரீதியிலான துன்புறத்தல்களுக்கு ஆளாகும் இஸ்லாமியர் அல்லாத பிற மதத்தினர், தங்களுக்கு பாதுகாப்பான இடமாக இந்தியாவைக் கருதி அடைக்கலம் புகுவதாக கூறியதுடன், இதேபோன்ற துன்புறுத்தலுக்கு இஸ்லாமியர்கள் ஆளாகியிருந்தாலும் அவர்களுக்கு மட்டும் இந்தியாவில் இடமில்லை என அமித் ஷா கூறியது பெரும் சர்ச்சையானது.
இதற்கு முன்னரெல்லாம் இதுபோன்ற அரசியல் அமைப்பு சட்டத் திருத்தங்கள் கொண்டுவரும்போது, அனைவரையும் சமமாக பாவித்தே மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்தச் சட்டத் திருத்தம் தங்களுக்கு மனநிறைவு தருவதாக ஒரு தரப்பில் கூறுவது மோசமான அரசியலாகும். நாட்டை விட, பெரும்பான்மை மக்களின் எண்ணத்தை விட ஒரு கட்சியின் கொள்கைகளை திருப்தியடையச் செய்யும் வகையிலான இதுபோன்ற சட்டங்கள் கடும் விமர்சனங்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் ஆளாவது தவிர்க்க முடியாத ஒன்று. இதன்மூலம் தெரிய வரும் நீதி என்னவெனில், மக்களின் எண்ணங்களுக்கு எதிராக எதையும் செய்யக் கூடாது என்பதேயாகும்.
இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டம்: உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வீழ்ச்சி!