அண்மைக் காலமாக சினிமா துறையில் அரசியல் தலைவர்களின் பயோபிக் திரைப்படங்கள் ட்ரெண்டாகி வருகின்றன. குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர்கள் என்.டி.ராமராவ், வொய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மற்றும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரது பயோபிக் படங்கள் வரிசையில் நிற்கின்றன.
இந்த வரிசையில், தற்போது உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சி தலைவரும் முலாயம் சிங் யாதவின் திரைப்படம் தயாராகி வருகிறது. சுவேண்டு ராஜ் கோஷ் இயக்கத்தில் மீனா சேத்தி மொண்டல் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு பெயர் மெயின் முலாயம் சிங் யாதவ் என பெயரிடப்பட்டுள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்தில் அமித் சேத்தி, மிமோ சக்ரவர்த்தி, கோவிந்த் நமதேவ், முகேஷ் திவாரி, சுப்ரியா கர்னிக், சயாஜி ஷிண்டே, சனா அமீன் ஷேக், ஜரீனா வஹாப் போன்ற நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
2 நிமிடங்கள் 55 வினாடிகள் ஓடக் கூடிய இத்திரைப்படத்தின் டீசரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். ஸ்ரீ கிருஷ்ணரின் பிரசங்கத்துடன் தொடங்கும் இந்த டீசர் "நீங்கள் விரும்பியதை எதிர்த்துப் போராட முடியாவிட்டால், நீங்கள் இழந்ததற்காக அழ வேண்டாம்." என்ற வசனங்களுடன் பார்ப்பவரை பிரமிக்க வைப்பதாக உள்ளது.
திரைப்படம் பற்றி பேசிய இயக்குனர் சுவேண்டு ராஜ் கோஷ், "முலாயம் சிங் யாதவ் பெயரே அதிகார வர்க்கத்திற்கு அதிர்ச்சியை அளித்தது. அவரது பயணம் மக்களுக்கு வெளியிடப்பட வேண்டும்.
ஒரு விவசாயிகளின் மகன் முதலமைச்சராக அதிகாரத்தைக் கைப்பற்றி, மிகவும் சக்திவாய்ந்த மனிதராக மாறிய வரலாற்றை சொல்லும் கதைக்களத்தைக் கொண்டிருக்கிறது. அவர் தனது மாநிலத்துக்காகவும், மக்களுக்காகவும் என்ன செய்தார் என்ற செய்திகளே நம்மை வியக்க வைக்கிறது.
அவரது சொல்லப்படாத சாதனைகளை உலகிற்கு முன்னால் வெளிப்படுத்தும் இந்த படைப்பிற்காக நான் பெருமைப்படுகிறேன். உண்மையான நிகழ்வுகளின் அடிப்படையில் துணிந்து சொல்லும் அரசியல்வாதியின் முதல் வாழ்க்கை வரலாறு இதுவாகவே இருக்கும்" என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
முலாயம் சிங் யாதவின் உண்மையான வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகிவரும் இந்த திரைப்படம் உத்தரப்பிரதேச மக்களின் பெரும் ஆதரவைப் பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.