உத்தர பிரதேச மாநிலம், பாராபங்கியில் விஷச் சாராயம் அருந்தியதால் 16 பேர் உயிரிழந்தனர். 38 நபர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளனர். சட்ட விரோதமாக சாராயம் தயாரித்து உண்மையான சாராய பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்ததால் இந்த விபரீதம் நடந்துள்ளது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பப்பு ஜெய்ஸ்வால் என்பவரை காவல்துறையினர் சுட்டுப் பிடித்தனர்.
பாராபங்கி, அம்ரை குண்ட் அருகே இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. பப்பு ஜெய்ஸ்வால் காலில் குண்டு பாய்ந்ததால், அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சாராயக் கடை விற்பனையாளர்களான சுனில் ஜெய்ஸ்வால், பிதாம்பர் ஆகியோரை காவல் துறையினர் நேற்று கைது செய்தது குறிப்பிடத்தக்கது. சாராயக் கடை முதலாளி தன்வீர் சிங் தலைமறைவாக உள்ளார். அவரை தனிப்படை காவலர்கள் தேடிவருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறை உயர் அலுவலர் அஜய் சஹ்னி, சட்ட விரோதமாக சாராயம் தயாரித்து உண்மையான சாராய பாட்டில்களில் அடைத்து விற்றதால் 16 பேர் உயிரிழந்துள்ளனர். விஷச் சாராயம் அருந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 10 பேர் பார்வையை இழந்திருக்கின்றனர் என்றார்.
விஷச் சாராயம் அருந்தி இறந்தவர்கள் குடும்பத்துக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.