இமாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான சிம்லாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பாஜக மூத்தத் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி கலந்து கொண்டார். காந்தி படுகொலை குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய அவர், "காந்தி படுகொலைக்குப் பின் நடத்தப்பட்ட விசாரணையில் பல குளறுபடிகள் நடந்துள்ளது. துப்பாக்கியால் சுடப்பட்ட பின் 40 நிமிடங்கள் வரை அவர் உயிரோடு இருந்தார்.
இருந்தபோதிலும் ஏன் அவர் அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படவில்லை. காந்தியுடன் எப்போதும் உடன் இருக்கும் மனு, அபா ஆகியோரை ஏன் காவல்துறையினர் சாட்சியமாகச் சேர்க்கவில்லை. அவர்கள்தான் சுட்டவரை அருகிலிருந்து பார்த்திருப்பார்கள்.
காந்தியின் படுகொலையால் அதிகம் பயனடைந்தவர் நேரு. படுகொலைக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தடை செய்யப்பட்டது. வல்லபாய் படேல் ஓரங்கட்டப்பட்டார். காந்தியின் படுகொலைக்கும் நேருவுக்கும் தொடர்பு இருக்கிறது என்று நான் சொல்லவில்லை. ஆனால், வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும். பல கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படவில்லை" என்றார்.