கேரள மாநிலம் கொத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னெரிக்கல் மஹரூப். தனது 23 சென்ட் நிலத்தில் தேங்காய், வாழை விவசாயம் செய்துவரும் மஹரூப், கிட்டத்தட்ட அப்புறப்படுத்தப்பட்ட 200 நெகிழிப் பைகளில் மஞ்சளும் பயிரிடுகிறார்.
இந்த மஞ்சள் விவசாயத்தில் மஹரூப் பின்பற்றும் வழிமுறைகளைப் பற்றி அறிந்தகொள்ள அவரிடம் பேசுகையில், முதலில் நெகிழிப் பைகளை மண் மற்றும் இயற்கை உரங்களை நிரப்பிய பின்னர், மஞ்சளை பயிரிட்டேன் என்றார்.
தொடர்ந்த அவர், இஞ்சி சாகுபடி பெரும்பாலும் நெகிழிப் பைகளில் நடப்பதால் மஞ்சளையும் முயற்சி செய்து பார்க்கலாம் என முயன்ற தனக்கு கைகளுக்கு மேல் பலன் கிடைத்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார். இதனால் அடுத்தமுறை இஞ்சி சாகுபடியையும் நெகிழிப் பைகளிலேயே முயற்சிக்கலாம் என்று இருப்பதாகவும் கூறினார்.
இவர் சாகுபடி செய்யும் மஞ்சள் பெரும்பாலும் நேரடியாக விற்கப்படுவதில்லை. அதற்குப் பதிலாக மஞ்சளை அரைத்துப் பொடியாக மாற்றியபின் விற்கிறார். இதனால் இவரது மஞ்சள் பொடிக்கு தனி மவுசு இருப்பதாக அப்பகுதியினர் கூறுகின்றனர்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "இப்போது மஞ்சளின் தேவை அதிகமாக இருக்கிறது. ஆனால் சாகுபடி சிறிது குறைவாக இருக்கிறது. அதனால் இந்த நெகிழிப் பைகளில் மஞ்சள் விவசாயம் செய்யும் திட்டத்தை எனது வீட்டின் மொட்டை மாடியிலும் விரிவுபடுத்தும் திட்டங்களும் உள்ளன" என்றார்.
அதேபோல் இந்த முயற்சியில் லாபம் ஈட்டுவதை விடவு உள்ளூர் மக்களுக்கு சுத்தமாக சத்தான மஞ்சளை வழங்குவதில் தான் மகிழ்ச்சியடைவதாக மஹரூப் குறிப்பிட்டார்.