மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தின் பம்ராகத் தாலுகாவில் தட்கான் என்ற கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தின் வழியே செல்லும் பம்ராகத்-அல்லப்பள்ளி பாதை நடுவில் நேற்று (மார்ச்4) கண்ணி வெடி ஒன்று தென்பட்டது.
அதனருகில் வைக்கப்பட்டிருந்த பதாகைகளில், “மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடுங்கள், எங்கள் இயக்கத்துக்கும் ஆதரவளிங்கள்” என்று கூறப்பட்டிருந்தது.
கண்ணி வெடி சாலையில் நடுவிலிருந்ததால் அவ்வழியே செல்ல பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அச்சமடைந்தனர்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் காவலர்கள் சம்பவ பகுதிக்கு விரைந்துவந்து கண்ணி வெடியை அப்புறப்படுத்தினர். அப்போது அது போலி கண்ணி வெடி என்பது தெரியவந்தது. இந்த நிலையில் அக்கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், மாணவிகள் இணைந்து நக்சலைட்டுகள் வைத்திருந்த பதாகையைத் தீயிட்டு எரித்தனர்.
மேலும் நக்சலைட்டுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர். மேலும் இர்பானார் கிராமத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட மாதவியின் மரணத்துக்கு நீதி கேட்டனர். 22 வயதான மாதவி 2018ஆம் ஆண்டு நக்சலைட்டுகளால் கொல்லப்பட்டார்.
நக்சலைட்டுகள் குறித்து காவலர்களுக்குத் தகவல் கொடுக்கிறார் என்ற தவறான புரிதலால் மாதவி கொல்லப்பட்டார் என்பது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க : 'ஆத்திரத்தில் அவ்வாறு செய்தேன்'- ஷாரூக் வாக்குமூலம்