கரோனா வைரஸ் நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் கரோனாவை எதிர்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றன. மகாராஷ்டிராவில் பொதுப்பணித் துறை அமைச்சர் அசோக் சவான், வீட்டுவசதித் துறை அமைச்சர் ஜிதேந்திர ஆவத் ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில சமூகநீதித் துறை அமைச்சர் தனஞ்செய் முண்டேவுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது, ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். முண்டேவின் தனி செயலர், ஊடக ஆலோசகர், மூன்று உதவியாளர்கள் ஆகியோருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரியா சூலே, மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார், அமைச்சர் ஜெயந்த் பாட்டீல் ஆகியோர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆண்டு விழாவில் பங்கேற்றனர். இதில், முண்டே கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. இது அம்மாநில அரசியல் பிரமுகர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தடையை மீறி கண்காட்சி நடத்திய கிராம மக்கள்!