இந்தியாவில் பாலைவன வெட்டுக்கிளி கூட்டத்தின் வருகையால் விவசாய மக்கள் மிகவும் வேதனையில் உள்ளனர். பல மாநிலங்கள் பயணம்செய்து தற்போது மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தைக் குறிவைத்துள்ளது. மேலும் நாக்பூர், வர்தா மாவட்டங்களில் பல பகுதிகளைச் சேதப்படுத்தியுள்ளதாக வேளாண்மை இணை இயக்குநர் ரவி போஸ்லே கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
நாக்பூர் மாவட்டத்தில் ஃபெட்ரி, கான்கவுன், கட்டோல் பகுதி, வர்தா மாவட்டத்தின் அஸ்தி தாலுகா போன்ற இடங்களில் இருக்கும் பண்ணைப் பகுதிகளில் வெட்டுக்கிளிகள் கூட்டம் கடந்த மே 23ஆம் தேதி இரவு புகுந்துள்ளது. தற்போது கட்டோல் பகுதியில் ஆரஞ்சு பயிர் பூ பூக்கும் சீசனாகும்.
தற்போது மழைக்காலம் தொடங்கவுள்ளதால் கத்திரிக்காய், வெண்டைக்காய், ஆரஞ்சு பழ பயிர்களைத் தவிர நல்வாய்ப்பாக வேறு எந்தப் பெரிய பயிரும் வயல்களில் போடவில்லை.
இந்தப் பாலைவன வெட்டுக்கிளி கூட்டத்தால் பெரியளவில் எந்த இழப்பும் ஏற்படவில்லை என்றாலும் சில ஆரஞ்சு பழத்தோட்டங்களும், காய்கறிகள் பயிரிடப்பட்ட வயல்களும் சேதமடைந்துள்ளன.
இதன் காரணமாக விவசாயிகள் தீயணைப்பு வண்டிகள் கொண்டு பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்த வண்ணம் உள்ளனர். மேலும் கடந்த மே 25ஆம் தேதி கட்டோல் பகுதியில் பர்சோனி, கல்மேஷ்வர் போன்ற இடங்களில் வெட்டுக்கிளி கூட்டம் வந்துள்ளதாகத் தகவல் வந்துள்ளது.
இதனைத் தடுக்க ஒலி எழுப்புவது, பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பது குறித்து விவசாயிகளுக்கு எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து விஞ்ஞானி பிரசாந்த் உம்பர்கர் கூறுகையில், "வேளாண்மைத் துறை ஒரு விரிவான கணக்கெடுப்புப் பணியை மேற்கொண்டுவருகிறது. இழப்பைக் குறைப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவசாயிகளுக்கு எச்சரிக்கை விடுத்துவருகிறது. பயிர்களைப் பாதுகாக்க விவசாயிகள் இரவில் சிறு குழுக்களை அமைத்து பாதுகாக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விவசாய நிலங்களில் ஈக்கள் போல் மொய்த்த 'பாலைவன வெட்டுக்கிளிகள்'