டெல்லி : மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மகாராஷ்டிரா அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரம் ஆகியவற்றில் மிகவும் பின்தங்கியவர்களான இருக்கும் மராத்தா சமூகத்தினருக்கு 16 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க இடமளித்து மகாராஷ்டிராவில், கடந்த 2018ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டத்தை எதிர்த்து, மும்பை உயர் நீதிமன்றத்தில் ஜே.லக்ஷ்மன் ராவ் பாட்டீல் என்பவர் வழக்கு ஒன்று தொடர்ந்தார்.
வழக்கின் முடிவில் மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்கி மாநில அரசு இயற்றிய சட்டம் செல்லும் என மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மராத்தா இட ஒதுக்கீடு தொடர்பான உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்த அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா, ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பாக நடைபெற்றுவந்தது. வழக்கின் கடந்த விசாரணையின்போது, மராத்தா இட ஒதுக்கீட்டுச் சட்டத்துக்கு இடைக்காலத் தடையை நீதிமன்றம் விதித்தது.
மேலும், இந்த வழக்கின் விசாரணை மேற்கொள்ள கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு பரிந்துரைப்பது தொடர்பாக தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே முடிவு செய்வார் என்றும் உத்தரவிட்டது. இதன் காரணமாக, மராத்தா சமூகத்தினர் இந்தாண்டு கல்வி நிறுவனத்திலும், அரசு வேலை வாய்ப்பிலும் இடஒதுக்கீடு பெற முடியாது சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த இடைக்காலத் தீர்ப்பை எதிர்த்து மகாராஷ்டிரா மாநில அரசு மேல்முறையீட்டு மனு ஒன்றை இன்று தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.