நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் எதிரொலியாக மாநிலம் விட்டு மாநிலம் சென்று வேலை செய்து வந்த ஏராளமான வேலைவாய்ப்பை முற்றிலுமாக இழந்துள்ளனர். கூலித் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள தங்களது சொந்த கிராமங்களை நோக்கி நடந்தவாறே பயணிக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அவர்களுக்கு ஆதரவுக் குரல்களும் பெருகி வந்தன. இதனையடுத்து, குடிபெயர்ந்த தொழிலாளர்கள், ஆன்மீக யாத்திரிகர்கள், மாணவர்களை சொந்த மாநிலங்களுக்கு மீண்டும் அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது.
இதற்காக நாடு முழுவதும் கடந்த மே 1 முதல் ஷ்ராமிக் சிறப்பு ரயில் சேவையை இந்திய ரயில்வே தொடங்கியது. இருப்பினும், இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவரவர் சொந்த இடங்களுக்கு திரும்ப உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘மாநில அரசு அவர்களின் பயணச் செலவை ஏற்க வேண்டும்’ என்று கூறியுள்ளது.
![Maharashtra Congress bears travel expenses of 27,865 migrants: Thorat](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/7163010_837_7163010_1589267336187.png)
இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கடந்த வாரம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடிபெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த இடங்களுக்கு செல்வதற்கான ரயில் கட்டணத்தை காங்கிரஸ் ஏற்கும் என்று தெரிவித்திருந்தார். இதனை அடுத்து கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களின் காங்கிரஸ் கட்சியினர் இச்செலவை ஏற்றுக்கொள்வதாகக் கூறி அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, கடந்த சில நாள்களில் மகாராஷ்டிராவில் சிக்கியிருந்த வெளிமாநிலங்களைச் சேர்ந்த 27,865 தொழிலாளர்களை சொந்த இடங்களுக்கு அனுப்பிவைத்துள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் பாலா சாகேப் தோரத், “காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவர்களின் அறிவுறுத்தலை அடுத்து மகாராஷ்டிரா காங்கிரஸ் குடிபெயர்ந்த தொழிலாளர்களை அவரவர் சொந்த ஊர்களுக்கு அவர்களை திருப்பி அனுப்பும் பணியைத் தொடங்கியது . மாவட்ட அளவில் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த தகவல் பதிவு செய்யப்பட்டு, அவர்களை அவரவர் சொந்த மாநிலங்களுக்கு அழைத்துச் செல்ல சிறப்பு ரயில்கள் முன்பதிவு செய்யப்பட்டன.
ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் மும்பை, நாக்பூர், புனே, வர்தா, மீராஜ், சந்திரபூர், அகமதுநகர் ஆகிய 7 பகுதிகளில் இருந்து உத்தரப் பிரதேசம், மத்தியப் ரதேசம், பீகார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு இயக்கப்பட்ட ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் பயணப்பட்ட பெரும்பாலான தொழிலாளர்களின் பயணச் செலவை காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொண்டது. மேலும், தொழிலாளர்களுக்கு அவர்களது பயணத்தின்போது தேவையான உணவு, முகக்கவசங்களும் வழங்கப்பட்டன.
சதாரா, அகமது நகர், புனே, நாக்பூர், சந்திரபூர், கோலாப்பூர் மற்றும் சாங்லி ஆகிய நாடுகளிலிருந்து தனியார் வாகனங்களில் 3,567 தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களின் பயணச் செலவுகளையும் காங்கிரஸ் ஏற்றுள்ளது”என கூறினார்.
இதையும் படிங்க : இன்று முதல் சிறப்பு ரயில் சேவை: கட்டுப்பாடுகளுடன் அனுமதி!