மகாராஷ்டிரா மாநிலத்தில், பன்வேல் என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த கரோனா தொற்று தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில், 40 வயது பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார் என, காவல்துறை உதவி ஆணையர்(ஏசிபி) ரவீந்திர கீதே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,"கரோனா தொற்று காரணமாக பன்வேல் என்ற பகுதியில் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் கரோனா தொற்றுப் பாதித்த 400 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
அங்கு சிகிச்சை பெற்று வந்த 40 வயது பெண்னை ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்ததாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின்னர் குற்றம்சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டார்" என்று கூறினார்.
இதுகுறித்து பாஜக தலைவர் ராம் கதம் கூறுகையில்," மகாராஷ்டிரத்தில் தவறான நிர்வாகம் நடந்து கொண்டிருக்கிறது. அதன் அலட்சியத்தின் காரணமாகவே, இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
அதேசமயம் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் சரியான நேரத்தில் உணவு வழங்கப் படுவதில்லை. மாநில அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது " என கேள்வி எழுப்பினார்.
இதேபோன்று, தனது ஜூனியர் பெண் வழக்குரைஞரை பாலியல் வன்புணர்வு செய்து, தவறான புகைப்படங்களை வைத்து அவரை மிரட்டியதாக, 50 வயது வழக்குரைஞர் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டார். பீகாரிலுள்ள பாட்னா மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 15 வயது சிறுமியைப் பாலியல் வன்புணர்வு செய்ததாக மருத்துவமனை காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவம், ஜூலை 8ஆம் தேதி நடைபெற்றுள்ளது. ஆனால், பாதிக்கப்பட்ட சிறுமி வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னரே, ஜூலை 16 ஆம் தேதி இச்சம்பவம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.