பாரதி என்னும் ஞானச் சூரியன்
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் 1882ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 11ஆம் நாள் சின்னசாமி-இலக்குமி அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்த ஆண் குழந்தைக்கு சுப்பிரமணியன் என்று பெயர்சூட்டி சுப்பையா என்று அழைத்து வந்தனர். இளமையிலேயே பழுத்த அறிவுடன் திகழ்ந்த சுப்பையா, அக்காலச் சமூகத்தில் மூட நம்பிக்கைகளால் மூழ்கியிருந்த இருளை-தனது ஞானச்சுடரால் விரட்டிய ஞானச் சூரியனாய் உருவெடுத்தார். எட்டப்ப நாயக்க மன்னர் அந்தச் சூரியனின் கவித்திறனைக் கண்டு வியந்து கலைமகள் என்று பொருள்படும் பாரதி என்ற பட்டப் பெயரைச் சூட்டினார்.
ஆணவத்தை நொறுக்கிய 'சின்னப்பயல்'
எட்டயபுர மன்னரிடம் பாரதிக்கு இருந்த நெருக்கத்தை விரும்பாத காந்திமதிநாதன் என்ற அரசவைப் புலவர், கவிஞர்களுக்குள் நடந்த போட்டியில், "பாரதி சின்னப்பயல்" என்ற வரியில் முடியுமாறு கவி இயற்ற முடியுமா என்று சவால் விட்டார். தன்னைச் சிறுவன் என்று மட்டம் தட்டவே புலவர் அந்த வரியைக் கொடுத்தார் என்று புரிந்துகொண்ட பாரதி,
"ஆண்டில் இளையவனென் றந்தோ அகந்தையினால்
ஈண்டிங் கிகழ்ந்தென்னை ஏளனஞ்செய் - மாண்பற்ற
காரிருள்போ லுள்ளத்தான் காந்திமதிநாதனைப்
பாரதி சின்னப்பயல்" - என்று பாடி முடித்தார்.
'தன்னைவிட வயதில் சிறியவன் என்ற அகந்தையால் தன்னை இகழ்ந்து ஏளனம் செய்த பெருமையற்ற கருமையான இருள் போன்ற உள்ளம் கொண்ட காந்திமதி நாதனைப் பார் மிகவும் சின்னப்பயல்' என்று பொருள்படும் பாடலைப் புரிந்துகொண்ட புலவர்கள் கரவொலி எழுப்பி பாரதியைப் பாராட்டினார்கள்.
பேனாவில் தீயூற்றி எழுதிய தேசியக்கவி
பெண் விடுலை, சமுதாய விடுதலையில் மட்டுமல்ல; தேச விடுதலைக்காகவும் பாரதி ஆற்றிய பங்கு அளப்பரியது. மற்றவர்கள் தம் பேனாவில் மையூற்றி எழுதியபோது பாரதியோ சுதந்திரத் தீயூற்றி எழுதினார்.
"தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை
கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ" - என்று விம்பி வெதும்பியவர்.
"என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?
என்றெம தன்னைகை விலங்குகள் போகும்?"
-என்று கசிந்துருக வைத்தவர்.
"அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே"
-என்று தமது வீரம் மிக்க வரிகளால் மக்களின் மனதில் விடுதலைப் போராட்ட உணர்வை வீருகொண்டெழச் செய்தவர் தேசியக்கவி பாரதி.
பாஞ்சாலி சபதத்தில் விடுதலைப் போராட்டத்தையே பாரதப் போராக உருவகப்படுத்தி அவர் எழுதிய விடுதலை வரிகளில் முக்கியமானதுதான்...
"தருமத்தின் வாழ்வுதனைச் சூதுகவ்வும்
தருமம் மறுபடி வெல்லும்" என்பது!
புரட்சியை தன் வீட்டிலிருந்து தொடங்கிய மகாகவி
தீண்டாமை, பெண்ணடிமை உள்ளிட்ட ஏராளமான சமுதாயக் கொடுமைகளை எதிர்த்துப் போராடிய பாரதி, அதை முதலில் தனது வீட்டிலிருந்தே தொடங்கினார். உயர்த்தப்பட்ட சாதியில் பிறந்த அவர், 'எனது மகள் - தாழ்த்தப்பட்ட சாதிக்கார இளைஞனோடு ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டு, அப்பா! இந்த இடத்தில் இவரோடு நான் நலமாக இருக்கிறேன் என்று கடிதம் எழுதினால் அதுதான் எனக்கு பெருமகிழ்ச்சி' என்று உளமாறச் சொன்னவர்.
இந்து கடவுளைப் போற்றி பாடல்களை எழுதியதுபோலவே இஸ்லாமியக் கடவுளையும் போற்றி பாடல் எழுதிக் கொடுத்தவர். 'தீண்டத் தகாதவர்கள்' என்று ஒதுக்கி வைக்கப்பட்டவர்களை தோள்தழுவிப் பழகி, அவர்களுக்கும் வேதங்களை சொல்லிக்கொடுத்து பூணூல் அணிவித்து சமதர்ம சமுதாயம் படைக்கப் போராடியவர். முற்றிய மூங்கிலை வளைக்க முடியாது என்று உணர்ந்ததாலோ என்னவோ,
"சாதிகள் இல்லையடிப் பாப்பா - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்"
-என்று சமுதாயச் சீர்திருத்தக் கருத்துகள் அனைத்தையும் பாப்பாக்களுக்குச் சொன்னவர் பாரதி.
"கற்பு நிலையென்று சொல்ல வந்தார், இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்" -என்று ஆண்களுக்கும் கற்பு நெறியை வலியுறுத்தியவர் பாரதி.
"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்;
எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை காண்" - என்று பெண் விடுதலைக்காக முழங்கியவர் பாரதி.
புரட்சிக் கவிஞனின் எழுச்சிக்கு வித்திட்ட முண்டாசுக்கவி
"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்" - என்று சிலாகித்தவர் பாரதி.
"மெல்லத் தமிழினிச் சாகும்-அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்
என்றந்தப் பேதை உரைத்தான்-ஆ!
இந்த வசையெனக் கெய்திட லாமோ?
சென்றிடு வீர் எட்டுத் திக்கும்-கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!" - என்று தமிழ் மொழியைக் காக்க உருகியவர் மகாகவி
"ஏழை யென்றும் அடிமையென்றும்
எவனும் இல்லை ஜாதியில்,
இழிவு கொண்ட மனித ரென்பது
இந்தி யாவில் இல்லையே"
"மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமை யைக்கொ ளுத்துவோம்" -என்று.
புரட்சிகள் பொங்கித் ததும்பிய மகாகவியின் மீது ஏற்பட்ட அபிமானத்தால் கனகசுப்புரத்தினம் என்ற தனது பெயரை "பாரதிக்கு அடியவன்" என்ற பொருளில் பாரதிதாசன் என்று மாற்றிக்கொண்டவர் புரட்சிக் கவி.
ஆனால், அதிமுக சார்பில் சட்டப்பேரவை உறுப்பினராகி... தற்போது திமுகவில் இணைந்துள்ள ஒரு அரசியல் புள்ளி, கடந்த வாரம் புத்தக வெளியிட்டு விழாவொன்றில், "தமிழ்த்துரோகி பாரதி... உண்மை தமிழ்க் கவி பாரதிதாசன்தான்...!" என்று பேசினார். ஆடு பகை குட்டி உறவு என்கிற கதையாக, உண்மைத் தமிழ்க்கவி என்று அவர் போற்றியவரின் உண்மைப் பெயரான கனக சுப்புரத்தினம் என்று அவரால் குறிப்பிட முடியாததில் இருக்கிறது பாரதியின் பெருமை!
என்றும் ஒளிவீசும் சூரியன்
பாரதியோடு தான் வாழ்ந்த வாழ்வைப் பற்றி ஊடகம் ஒன்றில் பகிர்ந்துகொண்ட செல்லம்மா, "உலகத்தோடு ஒத்து வாழ வகையறியாத கணவரோடு நான் அமர வாழ்வு வாழ்ந்தேன் என்றால் உங்களுக்கெல்லாம் சிரிப்பாகத்தான் இருக்கும்" என்று குறிப்பிட்டார். 'நிர்வாணிகளின் நகரத்தில் கோவணாண்டிகூட குற்றவாளி' என்பதால், ஊருடன் ஒத்துவாழ தனது கருத்துகளையும் கொள்கைகளையும் சமரசம் செய்துகொண்டு-வளைந்துகொடுத்து வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தில் வீழ்ந்தவர்கள் ஏராளம். ஆனால் பாரதியோ,
தேடிச் சோறு நிதந் தின்று - பல
சின்னஞ் சிறு கதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரை யெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ? -என்று,
நிதர்சன வாழ்வின் நிர்ப்பந்தங்களை எள்ளிநகையாடி இறுதிவரை கொள்கைப் பிடிப்போடு வாழ்ந்த மாவீரன்.
"நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்" -என்று,
நாட்டு விடுதலைக்காகவும் சமுதாய மேன்மைக்காகவும் ஓயாமல் எழுதிய அந்த மாபெரும் கவிஞனின் இறுதி ஊர்வலத்தில்கூட 11 பேர்தான் பங்கேற்றார்கள். ஆனால், இறந்து நூறாண்டு நெருங்கிய பின்பும், இன்றளவும் தனது கவிதைகளாலும் எழுத்துகளாலும் சமூகத்தின் இருளைக் கிழித்து ஒளிபரப்பிக்கொண்டிருக்கும் அந்த ஞானச் சூரியன் வையம் உள்ளவரை வாழும் என்பதில் சந்தேகமில்லை!