மும்பை: தானே மாவட்டத்தில் இரண்டரை வயது குழந்தையை கடத்திய, மூன்று பெண்கள் உள்பட ஐந்து பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்திலுள்ள அம்பர்நாத் பகுதியில் செப். 15ஆம் தேதியன்று இரண்டரை வயதுடைய ஆண் குழந்தை வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, அடையாளம் தெரியாத நபர்கள் குழந்தையை கடத்திச் சென்றனர்.
இதையடுத்து, அவரது பெற்றோர் குழந்தையைக் காணவில்லை என அப்பகுதி முழுவதும் தேடிவந்தனர். தொடர்ந்து எங்கு தேடியும் குழந்தை கிடைக்காத நிலையில், பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், குழந்தையைத் தேடிவந்தனர். மேலும், வாகனங்களில் போஸ்டர் ஒட்டியும் தேடினர். இந்நிலையில், உல்ஹாஸ்நகர் பாரத் நகர் பகுதியில் குழந்தை இருப்பதாக ரிக்ஷா ஓட்டுநர் ஒருவர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்துசென்ற காவல் துறையினர், ஒரு தம்பதியிடமிருந்து குழந்தையை மீட்டனர். மேலும், அவர்களிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், தங்களுக்கு குழந்தை இல்லாததால், இக்குழந்தையை 70 ஆயிரம் ரூபாய்க்கு ஜைனத்பி ஃபாகிர் முகமது கான் என்ற பெண்ணிடமிருந்து வாங்கியதாகத் தெரிவித்தனர்.
தொடர்ந்து, குழந்தையை கடத்திய நபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி, பூஜா மகேஷ் செட்டியார் (28), ஷெரு சுக்ரம் சரோஜ் (45), முகேஷ் அனில் கார்வா (36), மாயா சுக்தேவ் காலே (30) உள்ளிட்டோரை கைதுசெய்தனர்.
பின்னர், குழந்தையை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்த காவல் துறையினர், கைதுசெய்யப்பட்ட ஐந்து பேரிடம் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: 11 நாள்களுக்குப் பின்பு கடத்தப்பட்ட 3 வயது குழந்தை மீட்பு: தலைமறைவான வடமாநில நபருக்கு போலீஸ் வலை!