மத்தியப் பிரதேசம் மாநிலம் ரத்லம் மாவட்டத்தில் இயங்கிவரும் உணவுப்பொருள் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் காலாவதியான பிஸ்கட், கேக் உள்ளிட்ட குழந்தைகளுக்கான உணவுப்பொருள்களை மறுபடியும் பொதி கட்டி (பேக்கிங்) சந்தைப்படுத்துவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத்தொடர்ந்து, அந்தத் தொழிற்சாலைக்கு திடீரென சென்ற உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்தச் சோதனையின்போது, அங்கு ஏழு லட்சம் ரூபாய் மதிப்பிலான சுமார் 200 அட்டைப்பெட்டிகளில் காலாவதியான உணவுப்பொருள்கள் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
அவற்றைப் பறிமுதல்செய்த அலுவலர்கள், இது குறித்து வழக்குப்பதிவு செய்யுமாறு ரத்லம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌரவ் திவாரிக்குப் பரிந்துரைத்தனர்.
இதனையடுத்து, கெட்டுப்போன உணவுப் பொருள்களை நுகர்வோர் சந்தையில் மீண்டும் விற்பனை செய்த தொழிற்சாலையின் உரிமையாளர் மீது உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2006-இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்தச் சோதனை குறித்து தகவலறிந்து தப்பி ஓடிய தொழிற்சாலை உரிமையாளரைக் கைதுசெய்ய தீவிர தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது.