கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கியிருந்தனர். சுமார் 50 நாட்களுக்கும் மேலாக நீடித்த ஊரடங்கில், பலர் தங்களது நேரத்தினை திரைப்படம் பார்த்தும், செல்போனில் கேம்ஸ் விளையாண்டும் செலவிட்டனர். ஆனால், சிலர் இந்த ஊரடங்கை மிகவும் உபயோகமாக செலவிடத் தொடங்கினர். அப்படி ஒரு முயற்சியில்தான் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பழங்குடியினத் தம்பதியினர் ஈடுபட்டு, வெற்றி கண்டுள்ளனர்.
மத்தியப்பிரதேச மாநிலம், சத்னா மாவட்டத்தில் பார்ஹா மவான் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சோட்டு மாவாசி - ராஜ்லாலி மாவாசி தம்பதியினர். இவர்கள் ஊரடங்கு அறிவித்ததால், வீட்டில் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தனர். அப்போதுதான் அவர்கள் மனதில் ஒரு யோசனை தோன்றியுள்ளது.
இப்பகுதியில் நிலவும் தண்ணீர்ப் பஞ்சத்தைப் போக்கும் வகையில் வீட்டின் பின்புறத்தில் கிணறு ஒன்றை வெட்டலாம் என முடிவெடுத்துள்ளனர். நினைத்தபடியே 21 நாட்களில் வெற்றிகரமாக கிணறு வெட்டியதால், அதிலிருந்து பாயும் நீரைக் கண்டு மகிழ்ச்சியில் துள்ளி குதித்துள்ளனர்.
இதுகுறித்து பழங்குடியின தம்பதியினர் நமது ஈடிவி பாரத்திற்கு அளித்தப் பேட்டியில், "தண்ணீர் பிரச்னையைப் போக்கும் வகையில், கிணறு ஒன்றை வெட்ட முடிவு செய்து 20 நாள்களுக்குள் வெற்றிகரமாக செய்து முடித்தோம். எங்கள் கைகளால் தரையில் இருக்கும் பெரிய பாறைகளைத் தோண்டி உடைப்பது எளிதல்ல. ஆனால், நாங்கள் அதை செய்தோம். எந்த ஒரு இயந்திர உபகரணங்களும் இன்றி, நாங்கள் இதை செய்து முடித்துள்ளோம். தற்போது இந்த தண்ணீரைப் பயன்படுத்தி காய்கறிகளை பயிரிட்டு வருகின்றோம். நீண்ட நாள்களாக நீடித்த தண்ணீர் பிரச்னைக்குத் தற்போது நிரந்தரத் தீர்வு கிடைத்துள்ளது" எனப் புன்சிரிப்புடன் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து பாஜக எம்.பி. கணேஷ் சிங் அறிந்ததும், நேரடியாக அக்கிராமத்துக்குச் சென்று அவர்களை சந்தித்தார். கிணற்றை அகலப்படுத்துவதற்கான யோசனைகளை பழங்குடியின தம்பதியினருக்கு வழங்கினார். இந்தப் பழங்குடியின தம்பதியினரின் முயற்சிக்கு ஒரு சல்யூட் தெரிவிப்பதாகவும், பார்ஹா மவான் கிராமத்தை, ஒரு முன்மாதிரி கிராமமாக மாற்றுவதாகவும் தெரிவித்தார்.