இந்துத்துவா பேசும் பல அரசியல் தலைவர்கள் சர்சையில் மாட்டிக்கொள்வது ஒன்றும் புதிதல்ல. அந்த வகையில் கடவுள் அனுமன் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்று உ.பி. பாஜக முதலமைச்சர் ஆதித்யநாத் பேசியிருந்தார். இதனையடுத்து , கடவுள் சிவன் பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்தவர் என்று பேசி, பீகார் பாஜக அமைச்சர் பிரிஜ் கிஷோர் பிந்த் 'சர்ச்சைப் போட்டி'யில் இறங்கியுள்ளார்.
பீகாரில் புதியதாக நியமிக்கப்பட்ட ஆளுநர் பாகு சவுகானுக்கு, தலைநகர் பாட்னாவில் கடந்த புதன்கிழமையன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. இவ்விழாவில் பீகார் துணை
முதலமைச்சர் சுஷில் குமார் மோடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய அம்மாநில பாஜக அமைச்சரான பிரிஜ் கிஷோர் பிந்த், "கடவுள்களில் உயர்ந்தவரான மகாதேவ் (சிவன்)
சமூகத்தாலும், கல்வியாலும் பிற்படுத்தப்பட்ட பிரிவாக இருக்கும் 'பிந்த்' சாதியைச் சேர்ந்தவர்” என்று குறிப்பிட்டுள்ளார். அவரது இந்தப் பேச்சைக் கேட்ட ஆளுநர், துணை முதலமைச்சர்
உள்ளிட்ட பல பாஜக தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து பத்திரிகையாளர்கள் சிவன் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் என்று கூறுகிறீர்களே அது உண்மையா என்று கேட்டபோது, ''நான் சிவபுராணத்தில் என்ன குறிப்பிட்டிருந்ததோ அதைதான் மேடையில் பேசினேன். அதில் கடவுள் சிவன் பிந்த் சமூகத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்பட்டுள்ளது . நூலை எழுதியிருப்பது வரலாற்று அறிஞர் , வித்யாதர் மகாஜன்" என்றும் தெரிவித்துள்ள்ளார். மேலும் அவர் " கடவுள் ராமர் சத்ரியகுலத்தைச் சேர்ந்தவர் என்று கூறுகிறார்கள்; கடவுள் கிருஷ்ணர் யாதவ குலத்தைச் சேர்ந்தவர் என்று கூறுகிறார்கள்; அப்படி இருக்கும்போது, சிவன் பிந்த் சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க முடியாதா?" என்றும் பதில் கேள்வி எழுப்பியுள்ளார். இதிகாசங்களும் புராணங்களும் புனைவுகளே என்ற வாதம் ஒரு புறம் இருக்க... கடவுளையும் சாதிய அடையாளத்துக்குள் கொண்டு வந்திருப்பது பல்வேறு தரப்பினரிடையே எரிச்சலைக் கிளப்பியிருக்கிறது.