சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் காவல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று சிபிஐ அதிகாரிகள் அவரது வீட்டிற்கு நேற்று சென்றனர். அவரது வீட்டில் இருந்த காவல்துறை அதிகாரிகள் சிபிஐ அதிகாரிகளை உள்ளே அனுமதிக்கவில்லை. பின்பு சிபிஐ அதிகாரிகளுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிபிஐ அதிகாரிகளை சிறைபிடித்த போலீசார், காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று சிறிது நேரத்துக்கு பிறகு விடுவித்தனர்.
இதனையடுத்து மத்திய அரசை கடுமையாக விமர்சித்து மேற்கு வங்கத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தர்ணா போராட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் ஈடுபட்டு வருகிறார்.
இவரது தர்ணா போராட்டம், இன்று நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. மேற்கு வங்காளத்திற்கு சிபிஐ அதிகாரிகள் செல்ல எதிர்ப்பு தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்பி-க்கள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். இவர்களது அமளியால் அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மேலும், மேற்கு வங்கத்தை அரசியல் ரீதியாக சிபிஐயை வைத்து கைப்பற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது என்று குற்றஞ்சாட்டியது. இது தொடர்பாக மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட அவை மீண்டும் கூடியது. அப்போதும் திரிணாமுல் காங்கிரஸ் அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மேலும் காங்கிரஸ் உறுப்பினர்கள் ரஃபேல் விவகாரத்தையும் முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர். இதேபோன்று அரசியல் கடசியின் உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அமளியில் ஈடுபட்டதால் அவை முடங்கியது. மீண்டும் மதியம் 2 மணிக்கு தொடங்கியபோது கூச்சல், சலசலப்பு அதிகரித்ததால் அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.