கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே இன்று உரையாற்றினார். அப்போது மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக, அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் பேசியதாவது: மக்கள் பல இன்னல்களை கடந்து இந்தியாவை காப்பாற்றியுள்ளனர். நீங்கள் எம்மாதிரியான கடினங்களைக் கடந்து வந்துள்ளீர்கள் என்பது எனக்கு தெரியும். உங்களின் தியாகத்திற்குத் தலைவணங்குகிறேன். கரோனா வைரஸ் நோய் நம் நாட்டை பாதிப்புக்குள்ளாக்கியதற்கு முன்பே, வெளிநாட்டு பயணிகளை நாம் மருத்துவப் பரிசோதனைக்கு உள்ளாக்கினோம்.
பிரச்னை பெரிதாகும் வரை நாடு காத்திருக்கவில்லை. கரோனா வைரஸ் பரவ தொடங்கியவுடனே அதனைக் கட்டுப்படுத்த முயற்சிகளை எடுத்தோம். சரியான நடவடிக்கைகளை விரைவாக எடுத்திருக்கவில்லை என்றால், அதன் விளைவுகள் என்னவாகியிருக்கும் என்பதை நினைத்துக் கூட பார்க்கமுடியவில்லை.
கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 100 தாண்டுவதற்கு முன்பே, வெளிநாட்டு பயணிகளை 14 நாள்கள் தனிமைப்படுத்தினோம். அதன் எண்ணிக்கை 550ஆக உயரும்போது, 21 நாள்கள் ஊரடங்கை விதித்தோம். இப்போது, வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.
மாவட்டங்கள், மாநிலங்களில் விதிகள் எப்படி கடைப்பிடிக்கப்படுகிறது என்பது தீவிரமாக கண்காணிக்கப்படும். கரோனா வைரஸ் அதிகரிக்காத மாநிலங்களில் நிபந்தனைகளுடன் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். புதிய வழிமுறைகள் வகுக்கும்போது, ஏழை மக்கள், தினக்கூலிகள் கருத்தில் கொள்ளப்படுவார்கள்.
ராபி பயிர்களின் அறுவடை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விவசாயிகளின் பிரச்னையைத் தீர்க்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கும். கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை 220 ஆய்வுக்கூடங்களில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,000 ஆக உயரும்போது, பாதிக்கப்பட்டோருக்குச் சிகிச்சை அளிக்க 1500 முதல் 1600 படுக்கை வசதிகள் தேவை எனக் கூறப்படுகிறது.
இந்தியா முழுவதும் 600 மருத்துவமனைகள் உள்ளன. அதில், ஒரு லட்சம் படுக்கை வசதிகள் உள்ளன. இதன் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். கரோனாவுக்கு எதிரான போரில் முன்னிலை வகிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் ஆகியோரை மக்கள் மதிக்க வேண்டும்.
உங்களுடன் வணிகம் மேற்கொள்பவர்களிடமும் தொழிற்சாலையில் பணிபுரிவோருடனும் அன்பாக இருக்க வேண்டும். ஊழியர்களை பணியிலிருந்து நீக்க வேண்டாம்" என்றார்.
இதையும் படிங்க: ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்ன சொல்லப் போகிறார் பிரதமர்