திருவநந்தபுரம்: கரோனா பாதிப்பில்லாத இடங்களில் ஊரடங்கை தளர்த்தும்விதமாக அரசு அறிவித்திருந்த நிலையில், அதனில் சில திருத்தங்களை மேற்கொண்டு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது கேரள அரசு.
கேரளாவில் தீவிரமாகப் பரவிவந்த கரோனா நோய்க் கிருமித் தொற்று தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், நாட்டிலேயே கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையில் முதலிடத்தில் இருந்த கேரளா, தற்போது கீழிறங்கி தரைமட்டத்தைத் தொட முனைந்துள்ளது. மேலும் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டும் வரும் மாநிலங்களில் பட்டியலில் கேரளா முதலிடத்தில் உள்ளது.
இம்மாநிலத்தில் கரோனா பாதிப்பு குறைந்துவரும் சூழலில் ஊரடங்கு நடைமுறையில் சில கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். கரோனா பாதிப்பு இல்லாத மாவட்டங்கள், நகரங்களில் வாகன பயன்பாடு அனுமதிக்கப்படவுள்ளதாகக் கூறப்பட்டது.
கடும் கட்டுப்பாடுகளோடு ஊரடங்கில் தளர்வு அளித்திருக்கும் ராஜஸ்தான் அரசு!
அதற்காக மாநிலத்திலுள்ள மாவட்டங்கள் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டன. அதன்படி அதிதீவிர பாதிப்புள்ள பகுதிகள் சிவப்பு மண்டலமாகவும், மிதமான அளவில் பாதிப்புள்ள பகுதிகள் ஆரஞ்சு-ஏ மண்டலமாகவும், குறைந்த பாதிப்புள்ள பகுதிகள் ஆரஞ்சு-பி மண்டலமாகவும், பாதிப்பே இல்லாத பகுதிகள் பச்சை மண்டலமாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.
ஊரடங்கு கட்டுப்பாட்டில் ஏற்பட்டுள்ள தளர்வு விதிகள் சிவப்பு மண்டலப் பகுதிகளுக்கு பொருந்தாது. அதன்படி கண்ணூர், கோழிக்கோடு, காசர்கோடு, மலப்புரம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ஊரடங்கு உத்தரவில் எவ்வித தளர்வும் கிடையாது. பழைய உத்தரவுகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயத்தில் பச்சை மண்டலத்திலுள்ள கோட்டயம், இடுக்கி போன்ற மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு இன்று முதல் தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் வாகன பயன்பாட்டுக்கு டெல்லி மாநிலத்தில் பின்பற்றப்பட்டுவரும் நடைமுறை கேரளாவில் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்படிருந்த நிலையில், மத்திய அரசின் தலையீட்டால் அதற்குத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து குறித்து தெரிந்துகொள்ள வேண்டியவை?
மேலும், கேரளாவிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் தனிநபர் இடைவெளி கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும். மக்கள் வெளியில் செல்லும்போது பாதுகாப்பு உபகரணங்களை அணிந்திருக்க வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனிநபர் வாகனங்கள் ஓட்டுநர் உள்பட மூன்று பேர் வரை செல்லலாம். இருசக்கர வாகனம் என்றால் ஒருவர் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்படும். ஆனால் வாகனங்களில் பெண்கள் செல்வதாக இருந்தால், அவர்களுடைய பாதுகாப்புக் கருதி கூடுதலாக ஒருவர் உடன் செல்லலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், ஒரு மாவட்டத்திலிருந்து மற்ற மாவட்டங்களுக்குச் செல்ல முடியாது. அலுவலகம் உள்ளிட்ட பணிகளுக்கு செல்வோர் தங்களிடமுள்ள அடையாள அட்டையை காட்டிவிட்டுச் செல்ல வேண்டும். முக்கியமாகப் பெருங்கூட்டங்கள், சமய கூட்டங்கள், விழாக்கள், கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள், சிகை அலங்காரக் கடைகள், பூங்காக்கள், மதுபான விடுதிகள் இயங்காது என்று அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
காவல்துறையினர் தாக்கியதில் விவசாயி பலி! 6 பேர் சஸ்பெண்டு
கேரளா மாநிலம் முழுவதும் 450-க்கும் மேற்பட்டவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 270-க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் காரணமாகவே அங்கு ஊரடங்கு விதிகளில் தளர்வு கொண்டுவரப்பட்டுள்ளது.
ஆனால் நாடு முழுவதும் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் தொடர்ந்துவரும் சூழலில், கேரளாவில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த விதிகளுக்கு மற்ற மாநில அரசுகள் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளன. கேரள அரசு ஊரடங்கு விதிகளைத் தளர்த்துவது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய உள் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.