ஊரடங்கு உத்தரவால் நாடு முழுவதும் கேப் போக்குவரத்து சேவைகள் சுமார் 50 நாள்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், மத்திய அரசின் லாக்டவுன் 4.0இல் அறிவிக்கப்பட்ட தளர்வுகளையடுத்து டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட பல நகரங்களில் மீண்டும் கேப் சேவையானது தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஊபர் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "மத்திய அரசின் லாக்டவுன் 4.0 தளர்வுகளின் அடிப்படையில், ஊபர் இந்தியா நிறுவனம் அதிகமான நகரங்களில் சேவைகளை மீண்டும் தொடங்குகிறது. புதிதாக 10 நகரங்களில் சேவையை தொடங்கியதையடுத்து, ஊபர் நிறுவனமானது நாடு முழுவதும் உள்ள 35 நகரங்களில் செயல்பாட்டில் உள்ளது" எனக் குறிப்பிட்டிருந்தனர்.
இதேபோல், ஓலா நிறுவனம் தங்களது சேவையை கர்நாடகா, தெலங்கானா, டெல்லி, ஹரியானா, சண்டிகர், பஞ்சாப், தமிழ்நாடு (சென்னை தவிர), ஆந்திரா, கேரளா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. ஓலாவின் பாதுகாப்பு நெறிமுறையின்படி ஓட்டுநர்களும், பயணிகளும் கண்டிப்பாக மாஸ்க் அணிந்திருக்க வேண்டும், பயணங்களுக்கு முன்பும் பின்பும் வாகனத்தை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும், ஒரு ரைடில் இரண்டு பயணிகளுக்கு மட்டுமே அனுமதி போன்ற பல கட்டுபாடுகளை விதித்துள்ளன.
வாகன சேவையை தொடங்குவதற்கு முன்பு ஒட்டுநர் மாஸ்க் அணிந்துள்ள புகைப்படத்தை செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். வாகனம் புக் செய்த பயனாளர் மாஸ்க் அணியாவிட்டால் ரைடை ரத்து செய்துகொள்ளலாம் என ஓலா நிறுவனம் ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: லாக்டவுன் 4.0: மகிழ்ச்சியில் அமேசான், பிளிப்கார்ட் !