புதுச்சேரியில் கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளாட்சித் தேர்தல் நடக்கவில்லை. இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இதில் மாநில தேர்தல் ஆணையரை நியமனம்செய்து உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து துணைநிலை ஆளுநரின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து உள்ளாட்சித் துறை தன்னிச்சையாக மாநில தேர்தல் ஆணையர் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது. புதுச்சேரி சட்டப்பேரவைக் கூடி சபாநாயகர் தலைமையில் உள்ளாட்சித் துறையின் அறிவிப்பு ரத்துசெய்யப்பட்டு, அமைச்சரவை பரிந்துரையின் பெயரில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அலுவலர் பாலகிருஷ்ணன் மாநிலத் தேர்தல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், மாநிலத் தேர்தல் ஆணையர் நியமனம் விதிமுறைகளின்படி நடைபெறவில்லை, விதிப்படி மாநிலத் தேர்தல் ஆணையரை நியமனம் செய்ய வேண்டும் என மத்திய உள் துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை சுட்டிக்காட்டி புதிய மாநிலத் தேர்தல் ஆணையரை நியமிக்க துணைநிலை ஆளுநர் அறிவுறுத்தினார். அதனடிப்படையில் உள்ளாட்சித் துறை மீண்டும் மாநிலத் தேர்தல் ஆணையர் தேர்வுசெய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது.
இதனிடையே தலைமைச் செயலாளர், உள்ளாட்சித் துறை செயலாளர், உள்ளாட்சித் துறை சார்பு செயலாளர் உள்ளிட்டோர் சட்டப்பேரவை உரிமைகளை மீறி செயல்பட்டுள்ளதாக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயமூர்த்தி, சட்டப்பேரவை தலைவர் சிவக்கொழுந்திடம் உரிமை மீறல் புகார் அளித்தார். அதனடிப்படையில் அந்தப் புகாரை சட்டப்பேரவைத் தலைவர் உரிமை மீறல் குழுவுக்கு அனுப்பிவைத்தார்.
அதனடிப்படையில் உரிமை மீறல் குழு சார்பு செயலாளர் கிட்டி பலராமனை உரிமை மீறல் குழு முன் முன்னிலையாகி விளக்கம் அளிக்க அழைப்பாணை அனுப்பப்பட்டது. அதனடிப்படையில் சட்டப்பேரவை துணைத்தலைவரும், உரிமை மீறல் குழு தலைவருமான எம்.என்.ஆர். பாலன் தலைமையில் கூடிய உரிமை மீறல் குழு முன் கிட்டி பலராமன் நேரில் முன்னிலையாகி விளக்கமளித்தார். இதனைத்தொடர்ந்து உள்ளாட்சித் துறை செயலாளர், தலைமைச் செயலாளர் ஆகியோருக்கும் அழைப்பாணை அனுப்பப்படும் எனத் தெரிகிறது.
இதையும் படிங்க: தற்கொலையில் புதுச்சேரி இரண்டாமிடம்!