பாட்னா: பிகார் மாநிலத்தில் உள்ள 243 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக அக்டோபர் 28ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில் மறைந்த மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி (எல்.ஜே.பி.) தேசிய ஜனநாயக கூட்டணியிருந்து விலகியது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து எல்.ஜே.பி. விலகியது தொடர்பாக பல்வேறு யூகங்கள் வெளியாகின. இந்நிலையில், எல்.ஜே.பி. விலகியது ஏன் என்ற கேள்விக்கு பிகார் துணை முதலமைச்சரும், பாஜக மூத்தத் தலைவருமான சுஷில் குமார் மோடி பதிலளித்துள்ளார்.
இது குறித்து அவர் வெள்ளிக்கிழமை (அக்.16) கூறுகையில், “பாஜகவை விட அதிக தொகுதிகளை எல்.ஜே.பி. கட்சியினர் கேட்டனர். அவர்கள் கேட்டது கிடைக்கவில்லை. ஆகவே கூட்டணியிலிருந்து விலகிவிட்டனர்” எனத் தெரிவித்தார்.
பிகாரில் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட தேர்தல்கள் நவம்பர் 3 மற்றும் 7ஆம் தேதி நடைபெறுகின்றன. தேர்தலில் பதிவான வாக்குகள் 10ஆம் தேதி காலை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
இதையும் படிங்க: ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்த எதிர்க்கட்சியின் முக்கிய தலைவர்கள்!