கரோனா அச்சுறுத்தலைத் தொடர்ந்து, நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து விதமான போக்குவரத்து சேவைகளும் முடக்கப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் மாநிலத்துக்கு நடந்தே செல்லும் அவலநிலை ஏற்பட்டது. அவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்து தரப்பட வேண்டும் என மத்திய அரசு, மாநில அரசுகளை கேட்டுக் கொண்டது.
இருப்பினும், வெளிமாநில தொழிலாளர்கள் அவதிக்குள்ளாவது குறித்து செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் மணிஷ் திவார் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஏழை மக்களின் உயிருக்கு முக்கியத்துவம் தரப்படுகிறதா என்ற கேள்வியை மத்திய அரசு தனக்குள்ளே கேட்டுக்கொள்ள வேண்டும். அப்படியிருந்தால், போக்குவரத்து சேவைகள் தொடங்கப்பட்டு அவர்களை வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
தங்கள் மாநிலத்துக்கு நடந்தே செல்லும் அவர்களை தடுத்து நிறுத்தக் கூடாது. உணவு அளிக்கப்பட்டிருந்தால் அவர்கள் ஏன் சாலைக்கு வரப்போகிறார்கள். அவர்களை பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பெங்களூரில் மதுபானம் கிடைக்காத விரக்தியில் தற்கொலை முயற்சி!