கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் மூன்றாவது கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கானது, வருகின்ற மே 17ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, இந்தியாவில் கரோனா வைரஸ் என்ன நிலையில் இருக்கிறது என்பது குறித்தும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் நாட்டு மக்களிடையே பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.
அப்போது இந்த ஒரு வைரஸ், உலகத்தையே உலுக்கி இருப்பதாகவும், நான்கு மாதங்களாக கரோனாவுக்கு எதிராக நாம் போராடி வருவதாகவும் கூறியுள்ளார். இந்த வைரஸ் தொற்றினால் உயிரிழந்த இந்தியர்களுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, கரோனா என்பது மனித இனத்தால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத மிகப் பெரிய பாதிப்பு எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், கரோனா பாதிப்பால் இந்தியா ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் இருப்பதாகவும், கரோனாவுக்கு எதிரான போராட்டத்தைக் கைவிடுவதற்கான நேரம் இதுவல்ல எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்காக ‘ஆத்மனிர்பர் அபியான்’ எனப்படக்கூடிய 20 லட்சம் கோடி ரூபாய் அளவிலான புதிய திட்டத்தை அறிவித்துள்ள பிரதமர் மோடி, உலகிற்கே இந்தியா நம்பிக்கை ஒளியை கொடுத்து வருவதாகப் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மேலும், நான்காவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றும், அது தொடர்பான கூடுதல் விவரங்கள் மே 18ஆம் தேதிக்கு முன்னர் அறிவிக்கப்படும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.