தென் கொரியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் நிறுவனம் எல்.ஜி. (LG Group). சர்வதேச அளவில் 12ஆவது பெரும் நிறுவனமாக உருவெடுத்து இயங்கிவரும் இந்நிறுவனத்தின் கீழ் பல்வேறு நாடுகளில் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே இயங்கிவரும் எல்.ஜி. நிறுவனத்தின் தொழிற்சாலையில் நேர்ந்த விபத்தில் அப்பாவி மக்கள் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அதேபோல் , தென் கொரியாவின் சியோசன் பகுதியில் இயங்கிவரும் தொழிற்சாலை ஒன்றில் நேர்ந்த தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த விபத்துகளுக்கெல்லாம் நிறுவனம் தான் பொறுப்பு என்றும், அதற்காக தாம் பகிரங்கமாக மன்னிப்பு கோருவதாகவும் எல்.ஜி. குழுமத்தின் தலைவர் கூ க்வாங்-மோ (Koo Gwang-mo) கூறியுள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.