பல மொழி, பல கலாசாரங்களை உடைய இந்தியாவை நினைத்துப் பெருமைகொள்ள வேண்டும். பல மொழிகளைக் கொண்ட பன்முகத்தன்மையால் இந்தியா மற்ற நாடுகளைவிட தனித்து விளங்குகிறது.
செழிப்பான தாய் மொழிகளை பாதுகாக்க நாம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. தொடக்கப் பள்ளிகளிலும் மேல்நிலைப் பள்ளிகளிலும் கல்விக் கொள்கையை வகுக்கும்போது நாம் மிக கவனமாக இருக்க வேண்டும். படைப்பாற்றலை மேம்படுத்த தாய்மொழி இன்றியமையாதது. சிறு வயதிலேயே படைப்பாற்றலை வளர்க்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
அறிவாற்றல், உணர்வுகளை வெளிப்படுத்த மொழி பெரும் பங்கு வகிக்கிறது. கலாசாரம், அறிவியல் ஆகியவற்றை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்ல மொழி ஒரு கருவியே. மனித பரிணாம வளர்ச்சியோடு மொழியும் வளர்ச்சியடையும். மொழிகளைப் பயன்படுத்தினால்தான் வளர்ச்சியடையும்.
வரலாறு, கலாசாரம், சமூக வளர்ச்சி ஆகியவற்றில் மொழி மிகப்பெரிய பங்காற்றுகிறது. நாகரிகத்தின் அடிப்படையே மொழிதான். தனிப்பட்ட அடையாளத்தின் காரணியாகவும் கலாசார, பாரம்பரியத்தின் காரணியாகவும் மொழி விளங்குகிறது. பலதரப்பட்ட மக்களிடையே ஒற்றுமை ஏற்படுத்த மொழி பெரிய அளவில் உதவுகிறது. நம் நாட்டில் 19 ஆயிரத்து 500 மொழிகளை மக்கள் தாய் மொழியாகப் பேசிவருகின்றனர் என மொழிகளின் கணக்கெடுப்பு கூறுகிறது. 121 மொழிகளை பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பேசிவருகின்றனர்.
சமூக-பொருளாதார காரணிகளை வைத்து மொழி மாறும் தன்மையுடைது. மொழி வளர்ச்சியடையவில்லையெனில் நாம் அனைவரும் இருளில்தான் இருக்க வேண்டும் என கவிஞர் ஆச்சாரியா கூறுகிறார்.
196 மொழிகள் அழியும் விளிம்பிலிருப்பதாக வெளியான தகவலை அறிந்து அதிர்ச்சியடைகிறேன். இதனை அதிகரிக்காமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். மொழிகளைப் பயன்படுத்துவதால் மட்டுமே அதனை அழியாமல் பார்த்துக்கொள்ள முடியும். மொழியைக் காப்பாற்றுவதற்கான முக்கியத்துவத்தை நான் பலமுறை அறிவுறுத்தியுள்ளேன். பல நூற்றாண்டுகளாக பயணித்து துடிப்பான நாகரிகத்தை வளர்த்த மொழி பொக்கிஷத்தை நாம் இழந்துவிடக் கூடாது. மொழிகளைப் புறக்கணித்தால் நம் அடையாளத்தை இழந்துவிடுவோம்.
மொழிகளைப் பாதுகாக்க நீண்டகால நடவடிக்கை தேவை. தொடக்கப் பள்ளிகளில் பயிற்றுமொழியாகத் தாய் மொழியை ஆக்க வேண்டும். தாய் மொழியில் குழந்தைகளுக்கு கற்பித்தால் அவர்களின் சிந்திக்கும் திறன், படைப்பாற்றல் வளரும் என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலக தாய்மொழி தினமான பிப்ரவரி 21ஆம் தேதி யுனெஸ்கோ அமைப்பின் இயக்குநர் ஆட்ரி அசவுலே, "எங்களைப் பொறுத்தவரை அனைத்து மொழிக்கும் முக்கியத்துவம் தர வேண்டும் என்றே நினைக்கிறோம். அனைத்து தாய் மொழிக்கும் தேசிய மொழி அந்தஸ்தை தந்துவிட முடியாது" எனத் தெரிவித்தார்.
நவீன உலகத்தில் ஆங்கில மொழி கற்றால் மட்டுமே வாய்ப்புகள் கிடைக்கும் என்று கட்டமைக்கப்பட்டுள்ளது. அது உண்மையல்ல. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளில்தான் ஆங்கிலம் பேசப்பட்டுவருகிறது. சீனா, ஜெர்மனி, ஃபிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளில் ஆங்கில கல்வி இல்லாமலேயே சிறப்பாக செயல்பட்டுவருகிறது. மற்ற சர்வதேச மொழிகளைக் கற்றுக்கொள்வதைப்போல் ஆங்கில மொழியை கற்றால் பெரிய அளவில் உதவும். தாய் மொழியில் வலுவான அடித்தளம் அமைத்துவிட்ட பிறகே ஆங்கில மொழியை கற்க வேண்டும்.
தாய் மொழியை பயிற்று மொழியாக ஆக்க எந்த அளவுக்கு நடவடிக்கை தேவையோ அதேபோல் நிர்வாக மொழியாக ஆக்கவும் நடவடிக்கை தேவை. நீதிமன்றங்களின் அலுவல் மொழியாக தாய் மொழியை ஆக்க வேண்டும். அதுவே ஜனநாயகத்தின் அடிப்படை. மொழி உள்ளிட்ட தடைகளை தகர்த்தால்தான் அனைவருக்குமான வளர்ச்சியை அடைய முடியும். அரசும் மக்களும் ஒன்றிணையும் இடங்களில் மொழி ஒரு தடையாக இருக்கக் கூடாது. பல மொழிகளை கற்பதற்கு நான் எதிரானவன் அல்ல. நாட்டின் வளர்ச்சிக்கு மனிதவளம் முக்கியப் பங்காற்றுகிறது. அறிவார்ந்த நாடுகளின் பட்டியலின் தலைமையை இந்தியா எதிர்காலத்தில் ஏற்கும்.
1999ஆம் ஆண்டு, கல்வியில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என யுனெஸ்கோ அமைப்பு தீர்மானம் நிறைவேற்றியது. அதில், 'தாய் மொழி, தேசிய மொழி, சர்வதேச மொழி என மூன்று மொழிகளை குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும், அறிவின் மூலாதாரமாக விளங்கும் தாய் மொழியைக் கற்றால் மற்ற மொழிகளைக் கற்பது எளிதாகும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச உள்நாட்டு மொழிகளைப் பாதுகாக்கும் ஆண்டாக 2019ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. நாட்டின் பல பழங்குடி மொழிகளை அழிவின் விளிம்பில் உள்ளது. தாய் மொழியை மக்கள் அதிகமாகப் பயன்படுத்த வேண்டும். பாடல்கள், கதைகள், புதினங்கள், நாடகங்கள் ஆகியவற்றை இந்திய மொழிகளில் மக்கள் இயற்ற வேண்டும். இந்திய மொழிகளில் வெளியிடும் புத்தகங்களுக்கு அதிக வரவேற்பு கிடைக்க வேண்டும். கிராமிய இலக்கியங்களுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும்.
அனைவருக்குமான வளர்ச்சியில் மொழி முக்கியப் பங்காற்றுகிறது. அரசின் நிர்வாகத்தில் மொழியை வளர்ப்பதும் ஒரு முக்கியப் பணியாக இருக்க வேண்டும். மொழியின் வளர்ச்சியை வைத்தே நாட்டின் வளர்ச்சியை கண்டறிய முடியும் என விவேகானந்தர் கூறினார். மக்களின் வளர்ச்சிக்கு மொழி பயன்பட வேண்டும். அட்டவணையில் உள்ள 22 மொழிகளில் உரையாட மாநிலங்களவையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஆறு பிராந்திய மொழிகளில் தீர்ப்புகளை வெளியிட உச்ச நீதிமன்றம் திட்டமிட்டுள்ளது. இதனை நேர்மறையாக எடுத்துக் கொள்ள வேண்டும். வங்கித் தேர்வுகளை ஆங்கிலம், இந்தி அல்லாமல் 13 பிராந்திய மொழிகளில் எழுதலாம் என நிதியமைச்சகம் திட்டமிட்டுள்ளது. ரயில்வே, அஞ்சல் துறை தேர்வுகளை அந்தந்த மாநில மொழிகளில் எழுதவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மொழிகளைக் காப்பாற்றவும் வளர்க்கவும் துணிச்சலான நடவடிக்கை தேவை. இந்தியாவில் உள்ள 65 விழுக்காடு மக்கள் 35 வயதுக்கு கீழானவர்கள் ஆவர். மொழிகளின் மீது அன்பு செலுத்த வேண்டும் எனக் குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும்.
தாய் மொழியை வளர்ப்போம், படைப்பாற்றலை மேம்படுத்துவோம், உணர்வுகளின் ஆன்மா தாய் மொழியே ஆகும். இவ்வாறு வெங்கையா நாயுடு தாய்மொழிகளின் முக்கியத்துவம் பற்றி எடுத்தியம்பியுள்ளார்.
'விழிபோல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்' என அன்றே பாடினார் கவிஞர் வாலி. ஒவ்வொருவரும் தங்கள் தாய்மொழியை கண்ணென காக்க வேண்டும்!