விவசாயிகளின் பிரச்னையை தீர்க்காமல் கடந்த 25 ஆண்டுகளாக அடுத்தடுத்து பொறுப்பேற்ற அரசுகள் தோல்வியை தழுவின. கோடிக்கணக்கான மக்களுக்கு உணவளிக்கும் விவசாய சமூகம் நம்பிக்கை இழந்து தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு சூழ்நிலை மோசமடைந்துள்ளது. 2016ஆம் ஆண்டு மட்டும் 11,379 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாளில் 31 பேரும், ஒரு மாதத்தில் 948 பேரும் தற்கொலை செய்துகொண்டதாக அந்த அறிக்கை தகவல் வெளியிட்டுள்ளது. 2014, 2015 ஆகிய ஆண்டுகளை காட்டிலும் தற்கொலையின் விகிதம் குறைந்துள்ளது. விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் விகிதத்தில் பல ஆண்டுகளாக மகாராஷ்டிரா மாநிலம் முன்னிலையில் உள்ளது. 2016ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் 3,661 பேர், கர்நாடகாவில் 2,078 பேர், மத்தியப் பிரதேசத்தில் 1,321 பேர், ஆந்திர மாநிலத்தில் 804 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது.
விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது 21 விழுக்காடு குறைந்தபோதிலும், விவசாய கூலிகள் தற்கொலை செய்துகொள்வது 10 விழுக்காடு அதிகரித்துள்ளது. விவசாயிகள் தற்கொலை செய்வதற்கான காரணங்களை (பயிர் இழப்பு, ஊதிய இழப்பு, கடன், குடும்ப பிரச்னை, உடல்நலக்குறைவு) தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கையாக வெளியிடுவது வழக்கம். தற்கொலை குறித்த அதிக விவரங்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் இம்முறை சேர்த்தபோதிலும், அது ஊடக வெளிச்சத்தில் வராமல்போனது. தற்கொலையை தடுக்க அரசு முன்னெடுத்த திட்டங்கள் குறித்தும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட அறிக்கையின்படி, 1995ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 3 லட்சத்து 30 ஆயிரத்து 407 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். இதே நிலை தொடர்ந்தால் 2020ஆம் ஆண்டுக்குள் 4 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வார்கள் என ஐ.ஏ.எஸ் அலுவலர் பி.சி. போத் கூறுகிறார்.
மழை, வெயில் என எதையும் பார்க்காமல் பயிரை வளர்த்த விவசாயிகளின் பிரச்னை தீர்ந்தபாடில்லை. 2013ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வங்கி கடனை கட்ட இயலாமலும், பயிர்களுக்கு போதுமான ஆதரவு விலை அளிக்காததாலும், போதுமான சேமிப்பு வசதிகள் செய்து தரப்படாததாலும் மகாராஷ்டிராவில் 15,356 விவசாயிகள் தங்களின் உயிரை மாய்த்துக்கொண்டனர். முன்னதாக வறட்சியின் காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். ஆனால், தற்போது வெள்ளத்தின் காரணமாக பயிர்கள் சேதத்திற்கு உள்ளாகிறது. மகாராஷ்டிராவில் மட்டுமல்ல நாடு முழுவதும் விவசாயிகளுக்கு இதே நிலைதான் தொடர்கிறது. 280 விவசாயிகள் மட்டும்தான் தற்கொலை செய்துகொண்டதாக தவறான செய்தி வெளியானது. இதனை எதிர்த்து விவசாயிகள் சங்கம் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாய கூலிகளின் தற்கொலை அதிகரித்துள்ளது அவர்களின் மோசமான சமூக பொருளாதார நிலையையே எடுத்துரைக்கிறது.
விவசாய கூலிகளுக்கு உதவும் நோக்கில் கொண்டுவரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் எந்த அளவுக்கு செயல்படுத்தப்பட்டுவருகிறது என்பதை ஆராய வேண்டும். 2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் ஊதியம் உயரும் என்ற உத்தரவாதத்திற்கான செயல்முறை திட்டம் தேவை.
விவசாயிகளுக்கு ஆதரவு தொகையாக ஆண்டுக்கு ரூ. 6000 வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. விவசாய பொருள்களை சந்தைப்படுத்துதல், விவசாய தொழில்களை ஒப்பந்தமயமாக்குதல், தனியார் முதலீட்டை அதிகரித்தல் போன்ற திட்டங்களை அமல்படுத்த மாநில முதலமைச்சர்கள் தலைமையிலான குழு உருவாக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா முதலமைச்சராக பட்னாவிஸ் இருந்தபோது உருவாக்கப்பட்ட பணிக்குழுவின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
விவசாயிகளின் குறையை தீர்க்க சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம் நடத்த வேண்டும் என பல அமைப்புகள் கோரிக்கை விடுத்தபோதிலும், மத்திய அரசு அதற்கு செவிசாய்க்காமல் உள்ளது. 2015ஆம் ஆண்டு 80 விழுக்காடு விவசாயிகள் கடன் வாங்கி தொழில் செய்ததாக தகவல் தெரிவிக்கிறது. விவசாயிகளின் பிரச்னையை தீர்க்க முடியாத அளவுக்கு கூட்டுறவு சங்கத்தின் நிலை உள்ளது.
காலநிலை மாற்றத்தால் சிறு குறு நிலங்களை உடைய விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மாவட்ட அளிவிலான திட்டங்கள் தேவை என மும்பை ஐஐடி ஆராய்ச்சி மாணவர்கள் கூறுகின்றனர். விவசாயத்தை அறிவியலுடன் இணைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். நாட்டின் உணவு பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கும் விவசாயிகளை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இதையும் படிங்க: தனி ஒருவனும் சர்ச்சைக்குரிய கிராமமும்!