சென்னை ஆயிரம்விளக்கு பகுதியை சேர்ந்த ஜோதிமுத்து என்பவர் புதுச்சேரியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
பின்னர் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில், ஜோதிமுத்துக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து, அவரது உடல் கோபளம்கடை மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அப்போது துளி அளவும் மனிதாபிமானம் இன்றி, 15 அடி ஆழமுள்ள புதைகுழியில் உடலை வீசி சென்ற நிகழ்வு காண்போரை அதிர்ச்சியில் உறைய வைத்தது.
இதற்கிடையே புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார் அளித்த பேட்டியில், “புதுச்சேரியில் முதல் கரோனா மரணம் என்பதால் ஊழியர்கள் பதற்றத்தில் இருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் கரோனா நோயாளியின் உடலை அடக்கம் செய்வதில் அலட்சியம் காட்டியதாக சுகாதார துறையில் ஒரு ஊழியரையும், உள்ளாட்சி துறையில் இரு பணியாளர்களும் பணி இடைநீக்கம் செய்து முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், “விசாரணை அறிக்கை வந்த பிறகு சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். யாரையும் விட்டு வைக்க மாட்டோம்” எனவும் முதலமைச்சர் நாராயணசாமி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரில், இரு வாரத்தில் 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!