உத்தரப் பிரதேச மாநிலத்தில் தொடர்ச்சியாக நடந்து வரும் குற்றச்சம்பவங்கள் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது. இந்த மாதத் தொடக்கத்தில் விகாஸ் துபேவை கைது செய்ய சென்ற காவலர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம், அதனைத் தொடர்ந்து நடந்த என்கவுன்ட்டர்கள், சில நாள்களுக்கு முன்னதாக பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷியை ரவுடிகள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த விவகாரங்கள் நடந்தன.
இதன் தொடர்ச்சியாக தற்போது கான்பூரைச் சேர்ந்த சஞ்சீத் யாதவ் என்ற நபரை கடத்தி பணம் கேட்டு குடும்பத்தினரை மிரட்டியுள்ளனர். ரவுடிகள் கேட்ட பணத்தை கொடுத்த பின்னரும், சஞ்சீத் யாதவை கொலை செய்துவிட்டு குற்றவாளிகள் தப்பியுள்ளனர். இந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனைப்பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ''பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷிக்கு பிறகு சஞ்சீத் குமார் கொலை செய்யப்பட்டுள்ளார். ரவுடிகள் கேட்ட பணத்தினை காவல் துறையினர் கொடுத்த பின்னரும் கொலை சம்பவம் நடந்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் புதிதாக குண்டர்களின் ஆட்சி நடந்து வருகிறது.
அந்த ரவுடிகளுக்கு முன்னால் சட்டம் ஒழுங்கு சரணடைந்துவிட்டது. வீடு, சாலை, பொது இடங்கள் என எங்கும் மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. அனைத்து இடங்களிலும் மக்கள் பாதுகாப்பின்றியே உள்ளனர்'' என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கு: சிபிஐ நீதிமன்றத்தில் அத்வானி வாக்குமூலம்!