ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேச மாநிலம், ஆந்திரா, தெலங்கானா என இரண்டாக பிரிக்கப்பட்டதை அடுத்து தலைநகர் ஹைதராபாத் தெலங்கானாவின் வசம் சென்றது.
இதனையடுத்து, ஆந்திரப் பிரதேச அரசு விஜயவாடா - குண்டூர் இடையே புதிய தலைநகரை அமைக்க சந்திரபாபு நாயுடு ஆட்சிக் காலத்தில் இடத்தைத் தேர்வு செய்து அதற்கு 'அமராவதி' என பெயர் சூட்டியது.
அந்த தலைநகர் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில், கடந்த 2019 ஏப்ரலில் நடந்த ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
அதன்பிறகு, முந்தைய தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற
சட்டத்தை மீறிய நிதி முறைகேடுகள், மோசடி பரிவர்த்தனைகள் உள்ளிட்டவை குறித்து விரிவான விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக் குழு (எஸ்.ஐ.டி) ஒன்று அமைக்கப்பட்டது.
அந்த எஸ்ஐடியின் சட்ட ரீதியிலான அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய முன்னாள் அமைச்சர் அலபதி ராஜேந்திர பிரசாத், தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளர் வர்லா ராமையா ஆகியோர் ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.
அதில், "ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தின் முதலமைச்சர் ஒய்.எஸ்.ஆர். ஜெகன் மோகன் ரெட்டியின் அரசு கடந்த பிப்ரவரி 21ஆம் தேதியன்று, காவல் துறை துணைத் தலைவர் தலைமையில் 10 உயர் அலுவலர்களை உறுப்பினர்களைக் கொண்ட எஸ்.ஐ.டி.யை அமைத்தது.
முந்தைய சந்திரபாபு நாயுடு ஆட்சியில் சி.ஆர்.டி.ஏ பிராந்தியத்தில் நில கையகப்படுத்தல் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாக குற்றம்சாட்டி, அதனை இந்த குழு விசாரிக்கும் என அரசு தெரிவித்தது.
சட்ட மற்றும் நிதி முறைகேடுகள் மற்றும் மோசடி பரிவர்த்தனைகள் பற்றிய அமைச்சரவை துணைக் குழுவின் அறிக்கை எஸ்ஐடி விசாரணைக்கு அடிப்படையாக அமையும் என அந்த உத்தரவில் பொது நிர்வாகத்துறை முதன்மை செயலாளர் பிரவீன் பிரகாஷ் கூறியுள்ளார்.
எஸ்.ஐ.டி யின் தன்னிச்சையானது, சட்டவிரோதமானது மட்டுமல்லாமல் அதன் அதிகார வரம்பு அரசியலமைப்புக்கு அப்பாற்பட்டதாக உள்ளது. எனவே, அதற்கு தடை விதிக்க வேண்டும்" என கோரியிருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று (செப்.17) நீதிபதி டி.வி.வி.சோமயஜுலு தலைமையிலான அமர்வுக்கு முன்பாக விசாரணைக்கு வந்தது.
மனுவை ஆராய்ந்த நீதிமன்றம், அரசின் சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணைக்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்து, மேலதிக விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.