பிகார் மாநிலத்தின் 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் பரப்புரை களம் தற்போது தீவிரமடைந்துள்ளது. இரண்டு முக்கிய அரசியல் கூட்டணிகளாக கருதப்படும் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான மகா கூட்டணியும், முதலமைச்சர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியும் நேருக்கு நேர் அரசியல் சண்டையிட்டு வருகின்றன.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தலைமையிலான மகா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தேஜஸ்வி பிரசாத் யாதவின் பரப்புரை பிகார் மக்களின் கவனத்தை தேஜஸ்வி பெற்றுள்ளார். தேர்தல் பரப்புரைக் களத்தில் போஜ்பூரியில் பேசி கலக்கும் லாலு பிரசாத் யாதவ் இல்லாத குறையை தேஜஸ்வி பெருமளவில் போக்கியுள்ளார்.
நேற்றைய (அக்டோபர் 22) பரப்புரையில் பேசிய தேஜஷ்வி பிரசாத் யாதவ், "ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் நிறுவனத்தலைவரும், எனது தந்தையுமான லாலுஜி நவம்பர் 9ஆம் தேதி பிணையில் விடுதலை செய்யப்படுவார். அவர் வெளியே வரும் நாளில் பிகாரின் அரசியல் களத்தில் இருந்து நிதிஷ்குமார் பிரியா விடைபெறுவார். பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் மகா கூட்டணி வெற்றி பெறுவது உறுதி.
முதலமைச்சர் நிதிஷ்குமாரின் ஊழலை அரசை தூக்கியெறிய, தொழிற்சாலைக் கொண்டுவர, வேலைவாய்ப்புகளை உருவாக்க, வாழ்வாதாரத்தை மேம்படுத்த மகா கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும். 15 ஆண்டுகளில் பிகாரில் வேலைகள், கல்வி, சுகாதார வசதிகள் மற்றும் தொழில்கள் வழங்காதவர்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளிலும் எப்படி வழங்குவார்கள். அவர்கள் எதையும் செய்ய மாட்டார்கள்.
பிகாரில் என்.டி.ஏ கூட்டணியை ஆதரித்து பரப்புரை செய்வதற்கு பிரதமர் மோடி வந்திருக்கிறார். பிகாருக்கு எப்போது சிறப்பு மாநில அந்தஸ்தை அளிப்பார் என அவரிடம் நான் கேள்விக்கேட்க விரும்புகிறேன். மகா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் 10 லட்சம் பேருக்கு பிகாரில் அரசு வேலை வழங்குவோம் என உறுதி அளிக்கிறோம்" என்றார்.