கிழக்கு லடாக் விவகாரத்தில் இந்தியா, சீனா நாடுகளுக்கு இடையிலான ஒன்பதாவது சுற்று கார்ப்ஸ் கமாண்டர் அளவிலான பேச்சுவார்த்தை நேற்று(ஜன-24) நடைபெற்றது.
கிழக்கு லடாக்கில் சீன எல்லைக்கு உட்பட்ட மோல்டோ எல்லைப் பகுதியில் காலை 11 மணியளவில் தொடங்கிய பேச்சுவார்த்தையானது, இன்று (ஜன.25) அதிகாலை 2.30 மணியளவில் நிறைவடைந்தது. சுமார் 15 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தையில், எல்லையில் படைகளைத் திரும்ப பெறுவது, பதற்றத்தை எற்படுத்தும் நடவடிக்கைகளைத் தவிர்ப்பது, எல்லையில் அமைதியை நிலைநாட்டுதல் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, கடந்தாண்டு நவம்பர் 6ஆம் தேதி, இரு தரப்பு ராணுவ அலுவலர்கள் அளவிலான 8ஆவது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. கடந்தாண்டு மே மாதம் சீனா எல்லையில் அத்துமீறியதைத் தொடர்ந்து, இரு நாட்டு எல்லையிலும் படைகள் குவிக்கப்பட்டுள்ளதால், அங்குப் பதற்றம் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.