கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி மகன் நிகில் குமாரசாமிக்கும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மகள் ரேவதிக்கும் பெங்களூருவுக்கு அருகேயுள்ள பண்ணை வீட்டில் இன்று திருமணம் நடைபெற்றது. கரோனா பரவல் காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு அமலிலுள்ள நிலையில், நிகிலின் திருமணம் நடைபெறுவது ஊடகங்களில் முக்கிய தலைப்புச் செய்தியாக இடம் பிடித்தது.
கர்நாடகா மாநில அரசு சார்பில் சமூக இடைவெளி முறையாக கடைப்பிடிக்கப்படவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இவ்வேளையில், நிகில் திருமணத்தில் சமூக இடைவெளி முறையாக கடைப்பிடிக்கப்படவில்லை என்று புகார் எழுந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் கர்நாடக மாநில துணை முதலமைச்சர் அஸ்வத் நாராயண், ‘நிகில் திருமணம் குறித்து ராம்நகர் இணைக் காவல் கண்காணிப்பாளரிடமிருந்து அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்த திருமணம் விவகாரம் ஊடக வெளிச்சத்தில் இருந்ததன் காரணமாக அறிக்கை கேட்கப்பட்டிருந்தது’ என்றார்.
தேசிய ஊரடங்கு: எளிய முறையில் குமாரசாமியின் மகன் திருமணம்
’ஏதேனும் விதிமீறல்கள் நடைபெற்றிருந்தால் இதுதொடர்பாக உரிய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து மக்கள் பிரதிநிதிகளும், மக்களும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும். இதுதான் நாம் முன்னுதாரணமாக இருக்கவேண்டிய நேரம். விதிமுறைகளை மீறியிருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். இல்லையென்றால் அது அரசாங்கத்தை கேலிக்கூத்தாகுவது போலாகும்’ என்றும் அவர் தெரிவித்தார்.
அதேபோல கர்நாடக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சதானந்தா கூறுகையில், “நிகில் கல்யாணத்தில் எந்தவிதமான விதிமீறல்களும் நடைபெறவில்லை என உறுதிபட தெரிவித்துகொள்கிறேன். திருமண நிகழ்வு நடந்தேறிய ராம்நகர் மாவட்டத்தில் இதுவரையில் ஒரு கோவிட்-19 நோயாளிகள் கூட கண்டறியப்படவில்லை என்பதனை அனைவரும் நினைவில் கொள்ள விரும்புகிறேன்” என்று கூறினார்.