ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா நெடுஞ்சாலையில் பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற பேருந்தின் மீது பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் மரணமடைந்தனர். இந்த தாக்குதலை ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த அடில் அகமது தார் என்பவர் தனியாக நின்று நிகழ்த்தினார். நாட்டை உறைய வைத்திருக்கும் இச்சம்பவத்திற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துவருகின்றன.
மேலும், அதி பாதுகாப்பு நிறைந்த புல்வாமா நெடுஞ்சாலையில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.தான் திட்டமிட்டு கொடுத்தது. எனவே பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுக்க வேண்டுமென ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.
அதேசமயம், இத்தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பில்லை; காஷ்மீரில் இந்திய பாதுகாப்புப்படை தொடர்ந்து செய்துவரும் அடக்குமுறையின் பிரதிபலிப்புதான் இது. அப்படி பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுத்தால் அப்போதும் பாதிப்புக்குள்ளாவது படை வீரர்களும், அப்பாவி பொதுமக்களும்தான் என மற்றொரு தரப்பினரின் கருத்தாக இருக்கிறது.
இது இப்படி இருக்க காஷ்மீர்... காஷ்மீரிகளுக்கே சொந்தம்- அம்மாநிலத்தில் இந்தியா, பாகிஸ்தான் இரண்டு நாடுகளுமே தலையிடக்கூடாது, பிரிவு 370 ஷரத்துகளை (காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்துகள்) இந்தியா மீண்டும் உயிர் பெறச் செய்ய வேண்டும் எனவும் சமூக வலைதளவாசிகள் பலர் வலியுறுத்த தொடங்கியிருக்கின்றனர்.
இந்நிலையில், அடில் அகமது தாரின் தந்தை குலாம் இந்த தாக்குதல் குறித்து பேசுகையில், "உயிரிழந்த பாதுகாப்புப்படை வீரர்களின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் வலி எனக்கும் ஏற்பட்டிருக்கிறது.
மூன்று வருடங்களுக்கு முன்பு எனது மகனும் அவன் நண்பர்களும் பள்ளியில் இருந்து வீடு திரும்பும்போது கற்கள் வீசியதாக அவர்கள் ராணுவத்தினரால் தாக்கப்பட்டனர். அந்த நொடிதான் அவன் பயங்கரவாத இயக்கத்தில் சேர உந்துதலாக இருந்தது. காஷ்மீர் பிரச்னையை பேசி தீர்க்க வேண்டும். பாதுகாப்புப்படை வீரர்களானாலும் சரி, தீவிரவாதிகளானாலும் சரி எளிய மனிதர்களின் பிள்ளைகள்தான் இங்கே பலியாகிறார்கள்" என்று வேதனையுடன் பேசினார்.
அரசுகளின் அதிகார பசி மறைய பாதுகாப்புப்படை வீரர்களும், எளிய மனிதர்களின் பிள்ளைகளும்தான் இரையாகிக் கொண்டிருக்கிறார்கள். எனவே இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் காஷ்மீரில் செய்யும் ஒட்டுமொத்த ஒடுக்குமுறையையும் இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். அப்படி நிறுத்திக்கொள்ளவில்லை என்றால் அங்கு மகிழ்ச்சி தராத ஜனனமும், துக்கம் தராத மரணமும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.