கர்நாடகாவில் மங்களூரு பகுதியில் உள்ள கத்ரி கம்பாலா சாலையில் ஷைலஜா என்ற மூதாட்டி, ஆட்டோவில் பயணம் செய்துள்ளார். அப்போது, சாலையின் மறுபுறத்தில் வந்த மினி லாரி திடீரென்று திசை மாறி, எதிரே வந்த ஆட்டோவில் மோதி, இழுத்துக் கொண்டு சென்றது. இதில் ஆட்டோ ஓட்டுநர் சாலையில் தூக்கி வீசப்பட்டும், சிறிது தூரம் மினி லாரி ஆட்டோவை இழுத்துச் சென்றது.
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த ஷைலஜாவை, மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் சென்றனர். ஆனால், அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஆட்டோ ஓட்டுநர் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்தார்.
இதுகுறித்து மங்களூரு நகர காவல் ஆணையர் பி.எஸ்.ஹர்ஷா கூறுகையில்," லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியதில், 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.
தற்போது, இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: லாரி மோதிய விபத்து... தந்தை கண்முன்னே உயிரிழந்த மகள்!