கர்நாடகா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக அம்மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்துவருகிறது. இந்த மழையால் தட்சிண கன்னடா, குடகு, சிக்கமகளூரு, ஹாசன், மைசூரு, மங்களூரு, கார்வார் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த கனமழை காரணமாக கிருஷ்ணா, மலப்பிரபா, கதபிரபா, நேத்ராவதி உள்ளிட்ட ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த ஆறுகளிலிருந்து வெளியேறும் வெள்ளநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுவதால் அம்மாநிலத்தில் உள்ள பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதுவரை வெள்ளப்பாதிப்புகளில் சிக்கிய 44ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். பின் முத்தோல் நகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது பேசிய அவர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு தேவையான உதவிகள் கொடுக்கும். இதுவரை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய ஐந்தாயிரம் கோடி ரூபாய் வரையிலான நிதி தேவைப்படும் என்றார்.
மேலும் இதுவரை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து தலா ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழைக் காரணமாக மாநிலத்தின் சில வழித்தடங்களில் பேருந்து சேவை நிறுத்தப்படுவதாக, அம்மாநில போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. அதேபோல் பாதிக்கப்பட்ட மக்களை ரயில்நிலையங்களில் தங்கவைக்க தென் மேற்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
தொடர் மழைக் காரணமாக தட்சிணா கன்னடா, உத்தர கன்னடா, ராய்ச்சூர், பாகல்கோட்டை, தார்வாட், பல்லாரி, குடகு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களிலும், வடக்கு, தெற்கு, உள் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த சூழலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பெலகாவி, பாகல்கோட்டை, உத்தர கன்னடா ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் பார்வையிட உள்ளார். கர்நாடகா மட்டுமல்லாமல் கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்துவருவது குறிப்பிடத்தக்கது.