காலாவதியாகி குப்பைக் கிடங்கிற்கு அனுப்பப்படும் பேருந்துகளை பெண்கள் கழிவறையாக மாற்றும் திட்டத்தை, கர்நாடக மாநில போக்குவரத்துத் துறை முன்னெடுத்துள்ளது. பெங்களூரு சர்தேச விமான ஆணையத்துடன் இணைந்து அம்மாநில போக்குவரத்துத் துறை செயல்படுத்தியுள்ள இந்தத் திட்டத்தை அம்மாநில துணை முதலமைச்சர் லஷ்மன் சவாதி தொடங்கி வைத்தார்.
சுமார் 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான இந்தத் திட்டத்தை மேலும் விரிவாக்க அரசு முயற்சித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதன்படி, இந்தத் திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட பேருந்தில் சூரிய சக்தி மூலம் செயல்படும் விளக்குகள், வாஷ் பேசின், நாப்கின் அளிக்கும் கருவி, டயாப்பர் மாற்றும் பகுதி ஆகிய வசதிகளும் உள்ளன.
ஒரு பேருந்தில் மூன்று இந்திய வகைக் கழிவறைகளும், இரண்டு மேற்கத்திய வகைக் கழிவறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் புதிய திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: பாதுகாப்புத் துறையில் தற்சார்பை நோக்கி பயணிப்போம் - பிரதமர் மோடி