ஹைதராபாத்: விஞ்ஞானி, தொழிலதிபர், தொலைநோக்கு சிந்தனையாளர் என பலமுகங்கள் இவருக்கு உண்டு. இயற்பியல் துறையில் கல்வி பயின்று, “இந்தியாவின் விண்வெளித் திட்டத்தின் தந்தை” என்று போற்றப்படும் இவர், நாட்டின் பலதுறைகளை நிர்மாணிப்பதில் சிறந்த கட்டமைப்பாளராக திகழ்ந்தார்.
ஏராளமான நிறுவனங்களை நிறுவ பெரும்பங்காற்றினார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தை (பிஆர்எல்) நிறுவுவதிலும் சாராபாயின் பங்கு அளப்பரியது.
இவரின் பெற்றோர் அம்பா லால் சாராபாய்- சரளாதேவி. இவர்கள் பெரும் வணிக ஜெயின் குடும்பத்தை சேர்ந்தவர்கள். இந்த தம்பதியருக்கு பிறந்த எட்டு மகன்களில் ஒருவர் விக்ரம் சாராபாய்.
தொழிலதிபரான அம்பா லால் சாராபாயிக்கு குஜராத்தின் பல்வேறு இடங்களிலும் நூற்பாலைகள் இருந்தன.
சிறு வயதிலேயே மகாத்மா காந்தி, ரவீந்திரநாத் தாகூர், ஜெ. கிருஷ்ண மூர்த்தி, மோதிலால் நேரு, வி.எஸ். ஸ்ரீநிவாச சாஸ்திரி, ஜவஹர்லால் நேரு, சரோஜினி நாயுடு, மௌலானா ஆசாத், சி.எஃப். ஆண்ட்ரூஸ் மற்றும் சிவி ராமன் ஆகியோரால் விக்ரம் சாராபாய் கவரப்பட்டார். இதுவே பின்னாட்களில் பல்துறை வித்தகராக சாராபாய் உருவாக காரணமாகிற்று.
குழந்தை பருவத்திலேயே கணிதம் மற்றும் அறிவியலில் சிறப்பு கவனம் செலுத்திய விக்ரம் சாராபாயின் அறிவு பசிக்கு அவரின் பெற்றோரும் தீனி போட தவறியதில்லை. ஆய்வகங்கள் மற்றும் பட்டறைகள் அமைத்து கொடுத்து பெரிதும் உறுதுணையாக இருந்தனர்.
அகமதாபாத்திலுள்ள குஜராத் கல்லூரியில், கல்லூரி படிப்பை நிறைவு செய்த சாராபாய், அதன்பின்னர் இங்கிலாந்து சென்று அங்குள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி பயின்றார்.
இந்நிலையில், நாடு சுதந்திரம் அடைந்த 1947 ஆம் ஆண்டில், கேம்பிரிட்ஜில் உள்ள கேவென்டிஷ் ஆய்வகத்தில் அண்டக் கரு (காஸ்மிக் ரே) ஆராய்ச்சி குறித்த பணிக்காக பிஎச்டி பட்டமும் பெற்றார்.
இவருக்கு அண்டக் கதிர்கள் மீது சிறப்பு ஆர்வம் இருந்தது, இதனால் பூனாவிலுள்ள மத்திய மெட்ரோலாஜிக்கல் ஆராய்ச்சி நிலையத்திலும் அண்டக் கதிர்கள் குறித்து சிறிது காலம் ஆராய்ச்சி செய்தார்.
முன்னதாக, இங்கிலாந்திலிருந்து திரும்பிய சிறிது காலத்திலேயே, குஜராத்தில் இயற்பியல் கூடம் ஒன்றையும் அமைத்தார் சாராபாய்.
இதன் கிளை 1955ஆம் ஆண்டு காஷ்மீரின் குல்மார்க் பகுதியிலும் நிறுவப்பட்டது. அதன்பின்னர், இந்திய அரசின் அணுசக்தித் துறை இதே இடத்தில் ஒரு முழு நேர ஆராய்ச்சி மையத்தை நிறுவியது.
ரஷ்யாவின் ஸ்பூட்னிக் ராக்கெட் ஏவுதலுக்குப் பிறகு இந்தியா போன்ற வளரும் நாட்டிற்கான விண்வெளித் திட்டத்தின் முக்கியத்துவத்தை அவர் வெற்றிகரமாக அரசாங்கத்திற்கு உணர்த்தினார்.
அந்த வகையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) நிறுவப்பட்டது சாராபாயின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாகும்.
மேலும், விண்வெளி திட்டத்தின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். நாட்டின் அணு அறிவியல் திட்டத்தின் தந்தையான டாக்டர் ஹோமி ஜஹாங்கிர் பாபா, இந்தியாவில் முதல் ராக்கெட் ஏவுதளத்தை அமைப்பதில் டாக்டர் சாராபாயை ஆதரித்தார்.
இந்த மையம் அரபிக் கடலின் கடற்கரையில் திருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள தும்பாவில் நிறுவப்பட்டது. இது பூமத்திய ரேகைக்கு அருகாமையில் இருப்பது மற்றுமொரு சிறப்பு.
இங்கு உள்கட்டமைப்பு, பணியாளர்கள், தகவல்தொடர்பு இணைப்புகள் மற்றும் ஏவுதளங்களை அமைப்பது என தொடர் சவால்களுக்கு மத்தியில், குறிப்பிடத்தக்க சாதனையாக 1963ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் தேதி சோடியம் நீராவி பேலோடு தொடங்கப்பட்டது.
இதற்கிடையில், 1966 ஆம் ஆண்டில் நாசா, டாக்டர் சாராபாய் உரையாடலின் விளைவாக, சேட்டிலைட் இன்ஸ்ட்ரக்சனல் டெலிவிஷன் எக்ஸ்ப்ரிமென்ட் (SITE) 1975-76ஆம் ஆண்டுகளில் தொடங்கப்பட்டது. அப்போது சாராபாய் நம்முடன் இல்லை.
டாக்டர் சாராபாய் இந்திய செயற்கைக்கோளை உருவாக்குவதற்கும், ஏவுவதற்கும் திட்டம் ஒன்றை தொடங்கியதன், விளைவாக முதல் இந்திய செயற்கைக்கோளான ஆர்யபட்டா, 1975ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
இந்திய விண்வெளித் துறையில் விக்ரம் சாராபாயின் சீரிய பங்களிப்பை போற்றும் வகையில் மத்திய அரசு 1962ஆம் ஆண்டு பத்ம பூஷணும், 1972ஆம் ஆண்டு பத்மவிபூஷண் விருதும் வழங்கி கௌரவித்தது நினைவுக் கூரத்தக்கது.
இதையும் படிங்க: விக்ரம் சாராபாயின் 100ஆவது பிறந்த நாளை நினைவுகூர்ந்த கூகுள்