இந்தியா முழுவதும் தீர்க்க முடியாத ஒரு சமுதாய பிரச்னையாக பார்க்கப்படுவது, கள்ளநோட்டு விவகாரம். இதற்காக அனைத்து உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகளையும் மாற்றிடும் அறிவார்ந்த ஒரு முயற்சியையும் இந்திய அரசு மேற்கொண்டது. ஆனால், அதுவும் பயனளிக்கவில்லை.
இந்த நிலையில், கரக்பூர் ஐ.ஐ.டி.யில் கணினி அறிவியல் துறையில் பயின்று வரும் ஆறு மாணவர்கள் குழுவாக இணைந்து சிறப்பு செயலி ஒன்றை உருவாக்கியுள்ளனர். ரூபாய் நோட்டுகளை புகைப்படமாகப் பிடித்து அந்த செயலியில் பதிவேற்றம் செய்தால், அவை போலியானதா அல்லது ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வமான நோட்டா என்பதை எளிதில் அறிந்துகொள்ளும் விதமாக அந்த செயலிக்கு கோடிங் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அக்குழுவின் தலைவராக இருக்கும் மாணவர் சந்தோஷ், '25 சிறப்பு அம்சங்கள் அடங்கியிருக்கும் அந்த செயலியானது, ரூபாய் நோட்டுகளின் புகைப்படங்கள் மூலம் இயங்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது' என தெரிவித்துள்ளார்.
மேலும், மாணவர்களின் இந்த தயாரிப்பிற்கு இந்தியா முழுவதிலுமிருந்து பல்வேறு தரப்பினர் தங்களின் பாராட்டுகளைத் தெரிவித்துவருகின்றனர்.