பட்ஜெட் விமான நிறுவனமான கோ ஏரில் பயிற்சி விமானியாக பணியாற்றிவருபவர் ஆசிப் கான். இவரது ட்விட்டர் பக்கத்தில் கடந்த வாரம் மதங்களுக்கிடையே வன்முறையை தூண்டும் விதமான கருத்து பதிவு ஒன்று வெளியானதாக சொல்லப்படுகிறது.
மத பிரிவினையைத் தூண்டும் விதமாக இருந்த அந்தப் பதிவு சமூக வலைதளங்களில் பூதாகரமாக மாறியது.இதனையடுத்து, சர்ச்சைக்குரிய அந்த பதிவின் மீது அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் ஆசிப் கான் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனிடையே, கோ ஏர் நிறுவனத்திலிரந்து அவர் பணி நீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியது.
இது தொடர்பாக கோ ஏர் வெளியிட்ட அறிக்கையில், " மதவாத பார்வையையும், மத பிரிவினைவாத கருத்துகளையும் கோ ஏர் நிறுவனம் ஒருபோதும் ஆதரிப்பதில்லை என்பதே கொள்கையாகக் கொண்டுள்ளது. யாரோ ஒருவர் அவரது ட்விட்டர் கணக்கை ஹேக் செய்து, இத்தகைய கேவலமான கருத்துகளை வெளியிட்டுள்ளதாக அறிய முடிகிறது.
மத வெறுப்பைத் தூண்டும் விதமாக கருத்து பதிவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிப் கானை எங்கள் நிறுவனம் பணி நீக்கம் செய்யவில்லை. அவரை நாங்கள் தற்காலிகமாக இடை நீக்கம் மட்டுமே செய்திருக்கிறோம். அவர் மீதான அறிக்கை வெளியான பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நமது ஈடிவி பாரத்திடம் பேசிய விமானி ஆசிப் கான், " அந்த ட்விட்டர் கணக்கே என்னுடையதில்லை. அது வேறு ஒரு நபரின் கணக்கு. இந்த வழக்கு என் மீது தவறாக பதியப்பட்டுள்ளது. நான் யாருக்கும் எதிராக எந்தவிதமான மோசமான மற்றும் கேவலமான கருத்தையும் தெரிவிக்கவில்லை.
எனக்கு கொலை மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. யாரோ ஒருவர் எழுதிய செய்திக்காக என் தாயையும் சகோதரியையும் பாலியல் வன்புணர்வு செய்வோம் என அச்சுறுத்தல் விடுக்கின்றனர்.
என்னுடைய பெயரைக் கொண்ட வேறு ஒரு நபர் புனித இந்து கடவுளை தவறாக கூறியதற்காக இவை அனைத்தையும் நான் எதிர்கொள்கிறேன்" என்றார்.