ஐ.நா. சபையில் வரலாற்றிலேயே முதல்முறையாக நாட்டின் மாநில அரசுக்கு அதன் சுகாதாரத் துறையினது சிறந்த பணியைப் பாராட்டி சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்த பெருமையை கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் தலைமையிலான சிபிஐ(எம்) அரசு இந்திய அரசுக்கு சேர்த்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாஸிஸ் கூறுகையில், "ஐ.நா. சபையின் யுஎன்ஐஏடிஎப் விருது கேரள அரசுக்கு வழங்கப்படுகிறது. உலகளாவிய தொற்று அல்லாத நோய்களைக் கட்டுப்படுத்தி, மக்களை நோயிலிருந்து பாதுகாக்கும் தடுப்பு முன்னெடுப்பு பணிகளைச் சிறப்பாகச் செய்தமைக்காகவும் இந்த விருது வழங்கப்படுகிறது" என்றார்.
கடந்த 2019ஆம் ஆண்டில் தொற்று நோய் அல்லாத நோய்களைக் கட்டுப்படுத்தவும், தடுக்கவும் கேரள அரசு செய்த தீவிர நடவடிக்கைகள், மனநல மேம்பாட்டுக்கான நடவடிக்கைகள் போன்வற்றை அங்கீகரித்து இந்த விருது ஐ.நா சபையால் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த விருதினைப் பெற்ற கேரள சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலாஜா, " வாழ்க்கை முறை நோய்களுக்கு சிகிச்சையளிக்க அடிப்படை அரசு பொது மையங்களில் இருந்து மருத்துவமனைகளுக்கு அனைத்து மட்டங்களிலும் வசதிகளை மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த சாதனைக்கு காரணமான கேரளாவின் அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் இந்த விருதை உரித்தாக்குகிறேன்.
இந்த விருது கேரளாவில் உள்ள வாழ்க்கை முறை நோய் கட்டுப்பாட்டு பொறிமுறையின் அங்கீகாரமாகும். மக்களில் பெரும் பகுதியினர் பெறும் இலவச சிகிச்சை மற்றும் மருத்துவர்களின் கனிவான சேவைகளுக்கு கிடைத்த அங்கீகாரம்" என தெரிவித்தார்.
கரோனா வைரஸ் பரவலைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திய கேரள அரசிற்கு மாண்பளிக்கும் வகையில் ஐ.நா சபையானது, சிறப்பு அழைப்பாளராக சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.ஷைலாஜாவை அழைத்து பொதுசேவை நாளில் பேசவைத்தது கவனிக்கத்தக்கது.